= இன்றைய தியானம் = << எப்போதும் உண்மையாய் >> கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! ஒரு அரசன் இருந்தான். தனக்கு வாரிசு இல்லாததினால் தன் நாட்டு மக்களில் ஒருவனை அடுத்த அரசனாக தெரிவு செய்ய விரும்பினான். அதை தண்டோரா போட்டு அறிவிக்கச்செய்தான். அரசனாகும் ஆசையில் வந்தவர்களுக்கு அநேக போட்டிகள் வைக்கப்பட்டது. அனைத்துப் போட்டிகளிலும் 5 பேர் முன்னிலை வகித்தார்கள். அந்த 5 பேருக்கும் கடைசியாக ஒரு சோதனையை அரசன் ஆயத்தம் செய்திருந்தான். அந்த 5 பேரையும் அழைத்து அவர்கள் கையில் ஒவ்வொரு விதையைக் கொடுத்து, "உங்களுக்கு ஒரு வாரம் அவகாசம் கொடுக்கிறேன். யார் இந்த விதையை தொட்டியில் விதைத்து, முடிந்த வரை பெரிதாக வளர்த்திக் காண்பிக்கிறீர்களோ, அவர்களே அடுத்த அரசன்" என்று கூறினான். விதையை வாங்கிச் சென்ற 5 பேரும் விதையை ஒரு தொட்டியில் போட்டு, உரம் போட்டு, தண்ணீர் ஊற்றி பராமரித்தார்கள். 3 நாட்களாகியும் விதை முளைக்கவில்லை. 3 பேர் அரசனாகும் ஆசையில் யாருக்கும் தெரியாமல், வளர்ந்த செடி ஒன்றை தொட்டியில் வைத்து வளர்க்க ஆரம்பித்தார்கள். ஒருவாரம் கழித்து 5 பெரும் அரசனைச் சந்திக்கச் சென்றார்கள். 3 பேர் வளர்ந்த செடியோடும், 2 பேர் வெறும் தொட்டியோடும் சென்றார்கள். அரசன் அந்த 2 பேரிடமும் "உங்களிடம் கொடுத்த விதை என்னாயிற்று?" என்று கேட்டான். "மன்னா, அதை இந்த தொட்டியில்தான் போட்டு, உரமிட்டு, தண்ணீர் ஊற்றி பராமரித்தோம் ஆனால், எதுவும் வளரவில்லை" என வருத்தப்பட்டு சொன்னார்கள்! உடனே, அரசன், அந்த 3 பேரையும் பார்த்து, "திருட்டுப் பயல்களா! நான் உங்களுக்கு வேகவைத்த விதைகளைக் கொடுத்தேன். ஒரு நாட்டை அரசாள, முதலில் வாழ்வில் உண்மை வேண்டும். நீங்கள் என்னை ஏமாற்ற நினைத்தீர்கள்! இவர்களைத் தூக்கி சிறையில் போடுங்கள்!" என்றான். உண்மையாய் நடந்த மற்ற 2 பேரையும், அவர்களின் தகுதிப்படி, ஒருவனை அடுத்த அரசனாகவும், மற்றவனை முதன்மை மந்திரியாகவும் நியமித்து உத்தரவிட்டான்! அரசனுக்கு மட்டுமல்ல, நம் ஆண்டவருக்கும் உண்மையாக இருப்பது மிக முக்கியம்! சில நேரங்களில் அஸ்திபாரமே ஆடும் அளவுக்கு சோதனை வரும். அந்த நிலையிலும் உண்மை வேண்டும். ஆபிரகாம், தன் மகன் ஈசாக்கு மீது கத்தியை ஓங்கும் வரை தன் உண்மைத்தன்மையில் சோதித்துப் பார்க்கப்பட்டார். ஆசீர்வதிக்கப்பட்டார். அனனியா-சப்பீராள் உண்மையில்லாதபடியால், குடும்பமாய் மரித்துப்போனார்கள். மோசே எங்கும் உண்மையுள்ளவராக இருந்தார். ஆண்டவராகிய இயேசு எல்லாவற்றிலும், எப்போதும், யாரைவிடவும், உண்மையுள்ளவராக இருக்கிறார். நாம் வேலை செய்யும் இடத்தில், படிப்பில், சபையில், ஊழியத்தில், பெற்றோரிடம் என நாம் எங்கும் உண்மையாக இருப்பது, நம் ஆண்டவரிடம் உண்மையாக இருப்பதே! உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ, உண்மையாக நடக்க முடியாமல், தண்டனைக்கு உள்ளாவான்! நாம் எப்படி? ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன். (வெளி 2:10) ஆமென்! = ஜெபம் செய்வோம் = அன்பின் பரலோகப் பிதாவே! உண்மையுள்ளவரே, நாங்களும் உமக்கு உண்மையாய் நடக்க எங்களை ஒப்புக்கொடுக்கிறோம். பொய்க்குப் பிதாவான பிசாசின் கிரியைகளைவிட்டு விலக உதவிடும்! உமக்கு நன்றி! மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வேண்டுகிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்! |