Jesus christ the WORD for LIFE*
<<குதிரையின் ஆயத்தம்>>
குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்! (நீதி 21:31)
ஜெயவீரர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துக்கள்!
தமிழகத்தின் பழைய அரண்மனைகளிலுள்ள வெளிப்பிரகாரங்களைப் பார்த்தால், தரையில் சுட்ட செம்மண்ணால் செய்யப்பட்ட டைல்ஸ் போடப்பட்டிருக்கும். ஆனால் ஆங்காங்கே 3 அங்குலத்திற்கு 3 அங்குலம் என்ற வகையில் சிறு சிறு குழிகள், சதுர வடிவில் 6 அங்குல ஆழத்தில் காணப்படும். வரலாறு அறிந்த மனிதர் சொல்லுவார்கள் அவைகள் எதற்கென்று! அந்த ராஜாக்களின் காலத்தில், யுத்தங்கள் நடக்கும்போது, தாங்கள் பயன்படுத்தும் போர்க்குதிரைகளை, அந்த குழிகளில் கால் சிக்கிக்கொள்ளாதவாறு பயிற்றுவிப்பார்களாம். எதிரி மன்னர்களின் குதிரைகள் அவ்வித பயிற்சி இல்லாததினாலே தங்கள் கால்களை அந்த குழிகளுக்குள் விட்டு சிக்கிக் கொள்ளுமாம். அதினாலே மிக எளிதாக எதிரிகளை வெற்றிகொள்ளுவார்களாம்.
ஆம் பிரியமானவர்களே, யுத்தத்திலே ஜெயம் வேண்டுமானால், (குதிரைகளாகிய) நாம் சரியானபடி ஆயத்தமாக வேண்டியது மிக மிக அவசியம். அழகு அல்ல ஆயத்தமே முக்கியம்.நாம் வாழ்கிற இந்நாட்களில் ஆவிக்குரிய வாழ்வில் மிகப்பயங்கரமான எதிரிகள் உண்டு. சோர்வுகள், பெலவீனங்கள், நோய்கள், இச்சைகள், குடும்பத்தில் பிளவுகள், பின்மாற்றங்கள், பிசாசின் கட்டுக்கள், மந்திரவாதங்கள், பொறாமைகள், வன்கண்கள் என பலவும், அவைகளின் தலைவனாகிய பிசாசும் நமக்கெதிராய் உண்டு. அவைகளை இயேசு ராஜாவின் பெயரால் நாம் வெற்றிகொள்ள எப்படி ஆயத்தமாவது?
அ) போர்க்குதிரையாக இருங்கள்: அனேக குதிரை வகைகள் உண்டு என்றபோதிலும், யுத்தத்துக்கென்று பழக்குவிக்கப்பட்ட குதிரைகளே போரிட பயன்படுத்தப் படும். முழங்காலில் நின்று ஜெபிக்கிறவர்களே போர்க்குதிரைகள்!
ஆ) கண்களுக்கு கலிக்கம் போடுங்கள்: குதிரைகளின் கண்கள் தேவையற்ற காரியங்கள் படக்கூடாது. அப்படி பட்டால், அதனுடைய யுத்தம்புரியவேண்டும் என்ற சிந்தை மாறிடும். சிலதைக் கண்டு மிரளும். சிலதைக் கண்டி மதிமயங்கும். இச்சையடக்கமுள்ள வாழ்வே அது!
என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி? (யோபு 31:1)
தீங்கான காரியத்தை என் கண்முன் வைக்கமாட்டேன்; (சங்கீ 101:3)
இ) வாயிலே கடிவாளம் பூட்டுங்கள்: குதிரைகளை அடக்கவும், விரும்பும் திசைக்குத் திருப்பவும் கடிவாளம் அவசியம். அளவான, நிதானமான, அதே நேரத்தில் சரியான பேச்சு அவசியம்!
பாருங்கள், குதிரைகள் நமக்குக் கீழ்ப்படியும்படிக்கு அவைகளின் வாய்களில் கடிவாளம்போட்டு, அவைகளுடைய முழுச்சரீரத்தையும் திருப்பி நடத்துகிறோம்.(யாக் 3:3)
கர்த்தாவே, என் வாய்க்குக் காவல் வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்.(சங்கீ 141:3)
கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்.(சங்கீ 34:1)
ஈ) கால்களில் பெலன்கொள்ளுங்கள்: போர்க்குதிரைகளை நன்றாக ஓடவிட்டு பழக்குவிப்பார்கள். மேலும் பாதங்களின் கீழே “லாடம்” என்ற இரும்பாலான ஒன்றை சிறுஆணியால் அடித்து வலுவேற்றுவார்கள். அடிக்கும்போது மிகுந்த வலி அக்குதிரைக்கு இருந்தாலும், அது குதிரையின் பாதத்துக்கு மிகவும் வலுசேர்க்கும் ஒன்றே! நம் கால்களை கிறிஸ்து என்ற கன்மலையின் மேல் நிறுத்தினால், அவரே நம்மை பெலப்படுத்துவார்.
உ) யுத்த வஸ்திரங்கள் உடுத்துங்கள்: யுத்தகாலத்தில், ஆயுதங்களை உடன் எடுத்துச்செல்ல வசதியாக தயாரிக்கப்படும் ஆடைகள் குதிரைக்கு மிகமுக்கியம். நமக்கோ அது கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்ட அனுபவமாகிய “இரட்சிப்பின் ஆடையே!”
அவர் இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார்.(ஏசா 61:10)
எ) கிறிஸ்துவை ஏற்றிவரும் வெண்குதிரையாக இருங்கள்: என்னதான் போர்க்குதிரையானாது அழகாக ஆயத்தமானாலும், அதன்மேல் ஏறிவருகிற வீரன் மிகமுக்கியமானவன். ஏனென்றால் வெற்றி என்பது ஆயத்தமாக்கப்பட்ட குதிரையினாலல்ல. அதனைச் செலுத்தும் வீரனைப்பொறுத்ததே! நாம் யாரைச்சுமந்து கொண்டு போரிடுகிறோம்? வெண்குதிரை என்பது பரிசுத்தத்திற்கான அடையாளம். மேற்கண்ட அனைத்து ஆயத்தங்களும் நம்மீது இருந்தால், நிச்சயமாகவே நாம் ஒவ்வொருவரும் ராஜாதிராஜா இயேசுவின் குதிரைகளே. அவரே நம்மேல் ஏறிக்கொள்ளுவார். நிச்சய வெற்றி நம்முடையதே!
பின்பு, பரலோகம் திறந்திருக்கக் கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார் (வெளி 19:11)
இரட்சிக்கிறதற்குக் குதிரை விருதா; அது தன் மிகுந்த வீரியத்தால் தப்புவியாது.(சங்கீ 33:17) நமது சுய பெலனும் அல்ல! கர்த்தரே ஜெயத்தைக் கொடுப்பவர். ஆயத்தமாவோம், இயேசு ராஜாவினாலே அனைத்தையும் ஜெயிப்போம்!
ஆமென்!
(குறிப்புகள்:
தின தியானங்களை உங்கள் இமெயிலில் பெற உங்கள் இமெயில்
முகவரியை graceministriestpr@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.
முந்தைய நாள் தியானங்களை wordforlifetamil.blogspot.com என்ற முகவரியில்
படிக்கலாம். படித்துப் பயன்பெறுவதோடு இவைகளை குறைந்த பட்சம்
ஒருவருக்காவது பகிர்ந்து எங்களோடு கர்த்தரின் ஊழியத்தில்
இணையுங்கள்!)
0 comments:
Post a Comment