JESUS CHRIST the WORD for LIFE*
<<மேலான அதிகாரம்>>
சர்வ வல்லவர் இயேசுவின் பெயரால் வாழ்த்துக்கள்.
‘’எல்ஷடாய்’’ என்ற கர்த்தரின் பெயருக்கு ‘’சர்வ வல்லமையுள்ளவர்’’ என்று பொருள். அனைத்தும் செய்ய வல்லவர் என்றும்; தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை; தேவனாலே எல்லாம் கூடும் என்று சொல்வதும் கூட மிகப்பொருத்தமானதே! அல்லேலூயா!
நமது ஆண்டவர் நம்மிடம் காட்டுகிற மாபெரும் கிருபை என்னவென்றால் அவர் தமது எல்லாம் செய்ய வல்ல வல்லமையை நமக்கும் கொடுக்கிறார் என்பதுவே!
(மாற்கு 9:23) இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும்,விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்.
விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்று கர்த்தர் சொல்வதைப் பாருங்கள்! ஆண்டவர் நமக்கு கொடுத்திருக்கிற மேலான அதிகாரத்தைப் பயன்படுத்தாமல் இருப்பது நமது தவறே!
“என்னில் விசுவாசமாய் இருக்கிறவன் என்னிலும் பலத்த காரியங்களைச் செய்வான்”என்று ஆண்டவர் சொல்லவில்லையா? கடுகு விதையளவு விசுவாசம் மலையைப் பெயர்க்கும் அல்லவா?
ஆம் நாம் நமது ஆண்டவர் இயேசுவின்மேல் வைக்கும் விசுவாசம் நம்மை எல்லாம் செய்யவைக்கும். நம்மை சுற்றி நின்று கொண்டிருக்கும் மலை போன்ற போராட்டங்களை; நிந்தைகளை; அவமானங்களை ; பாவ சாபங்களை பெயர்த்து எறிந்து போடும்! தொழிலில், வேலை செய்கிற இடத்தில், குடும்பத்தில், ஊழியத்தில், சரீரத்தில் காணப்படுகிற எல்லாப் பிரச்சனைகளும் மறைந்து போகும்.
சூழ்நிலைகள் ஒரு மனிதனுடைய விசுவாசத்தை குலைத்துப்போடும். எனவே எப்போதும்சூழ்நிலையைக் கண்டு பயப்பட வேண்டாம். தண்ணீரின் மேல் நடக்க ஆரம்பித்த பேதுரு தன் கண்களை கர்த்தரை விட்டு விலக்கினபோது விசுவாசம் காணாமற்போனதே! மூழ்க ஆரம்பித்தார் அல்லவா? ஆனால் அவரைக் கர்த்தர் கரம்பிடித்து தூக்கி மீண்டும் வெற்றி நடை போட உதவினார்.
ஆனால் அவ்வளவு தடுமாற்றங்களை வாழ்வில் கொண்டிருந்த பேதுரு பரிசுத்த ஆவியானவரின் பெலத்தால், பின்னாளில் ஆண்டவரைப் போலவே அற்புதங்கள் செய்தார் என்றால், அவர் எப்படிப்பட்ட ‘’விசுவாசி’’ ஆக இருந்திருக்க வேண்டும்?
(மாற்கு 9:24) உடனே பிள்ளையின் தகப்பன்: விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம்நீங்கும்படி உதவிசெய்யும் என்று கண்ணீரோடே சத்தமிட்டுச் சொன்னான்.
ஆம் நாமும் கூட நம் அவிசுவாசம் நீங்கும்படி கண்ணிரோடு வேண்டிக்கொண்டால், நம் விசுவாசத்தை கர்த்தர் வர்த்திக்கப் பண்ணி ஆசீர்வதிப்பார். நம்மைச் சுற்றி காணப்படுகிற பொல்லாத சூழ் நிலைகளையும்; பாவ, சாபங்களையும், பெலவீனங்களையும் ‘’இயேசு கிறிஸ்துவின் பெயரால் அப்பாலே போ’’ என்று சொல்லி வெற்றி சிறப்போம்; விடுதலை பெற்று; சாட்சியாய் வாழ்வோம். <நம்மாலே எல்லாம் கூடும்> கர்த்தர் எல்லாவற்றையும் விசுவாசத்தால் கூடச் செய்வார்!
கர்த்தருக்கே மகிமை! அல்லேலூயா!
ஊக்கமாய் ஜெபித்து கர்த்தரின் வருகைக்கு ஆயத்தமாவோம்!
ஆமென்!
(படித்துப் பயன்பெறுவதோடு இவைகளை குறைந்த பட்சம் ஒருவருக்காவது பகிர்ந்து எங்களோடு கர்த்தரின் ஊழியத்தில் இணையுங்கள்!)
For WORD for LIFE*
By GRACE ministries
(+91 99524 27477, +91 99945 99677, +91 99940 16570)
0 comments:
Post a Comment