ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு. (பிரசங்கி 3:3) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை நம்மோடிருப்பதாக! காலங்களையும் சமயங்களையும் ஏற்படுத்தி ஒவ்வொரு நொடியையும் ஆளுகை செய்பவர் நம் கர்த்தராகிய தேவனே! மேற்கண்ட வசனத்தை அடுத்து வரும் ஏழு வசனங்களிலும் சேர்த்து மொத்தம் 28 வகையான காலங்களைப் பார்க்கிறோம். பிறக்க, இறக்க; நட, நட்டதைப் பிடுங்க;கொல்ல, குணமாக்க; இடிக்க, கட்ட; அழ, நகைக்க; புலம்ப, நடனம்பண்ண; கற்களை எறிந்துவிட, கற்களைச் சேர்க்க; தழுவ, தழுவாமலிருக்க; தேட, இழக்க; காப்பாற்ற, எறிந்துவிட; கிழிக்க, தைக்க; மவுனமாயிருக்க, பேச; சிநேகிக்க, பகைக்க; யுத்தம்பண்ண, சமாதானம்பண்ண (பிரசங்கி 3:2-8) என்று வாசிக்கிறோம். நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டலும், அனைவருமே இப்படிப்பட்ட 28 காலங்களையும் (இன்னும் அதிகமாகவும் இருக்கலாம்) நம் வாழ்வில் தாண்டி வரவேண்டியது இருக்கும். விஷயம் என்னவென்றால், அவைகளில் 14 நன்மையான காலங்களும், 14 தீமையான காலங்களும் உண்டு. ஆனால் அவைகளில் எதுவுமே நிரந்தரம் இல்லை என்பதுதான் உண்மை! இது நாம் மனதார ஏற்றுக்கொள்ளவேண்டிய ஒன்று. நாம் இதை ஏற்றுக்கொள்ள மறக்கும்போதும்; மறுக்கும்போதும் மனதாலும் உடலாலும் துன்புற தொடங்குகிறோம். காலங்கள் கர்த்தரால் ஏற்படுத்தப்பட்ட ஒன்றாய் இருக்கும்போது, அது எப்படிப்பட்ட காலமாய் இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மனம் பக்குவப்படவேண்டியது அவசியம். கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும் - சங்கீ 34:1 என தாவீது ராஜா சொல்வது அனைத்துக் காலங்களையும் உணர்ந்துதான் என்பதே இந்த வசனத்தின் ஆவிக்குரிய அர்த்தம். நான் எந்த நன்மைக்குள் இருந்தாலும், எந்த தீய காலத்துக்குள் இருந்தாலும், கர்த்தரை ஸ்தோத்தரிப்பேன். அவரைத்துதிக்கும் துதி எப்போதும் என் வாயிலிருக்கும் என்று அவர் சொல்வது நமக்கு உணர்வைத் தருவதாக! நமக்கு மட்டும் ஏன் புலம்பல்? ஏன் கண்ணீர்? ஏன் கவலைகள்? எதுவும் நிரந்தரமாய் இல்லாதபோது, நாம் படுகிற கஷ்டங்களும், கவலைகளும் மட்டும் நம்மோடே தங்கிவிடுமா என்ன? நாம் அவைகளை உறுதியாய் பிடித்துக்கொண்டால் ஒழிய அவைகள் நம்மிடத்தில் தங்காது. அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் சமநிலை வாழ்வு வாழாவிடில் அனைத்தும் பிரச்சனையே! தாவீது ராஜா பத்சேபாளுக்கு பெற்ற மகன் இறந்தபோது, தாவீது யாரிடத்திலிருந்து சமாதானம் பெற்றார்? ஆபிரகாம், தனது அன்பு மகனை ஆண்டவர் பலியிடச் சொன்னபோது, எந்த மனநிலை பலியிட துணிந்தார்? யோசேப்பு கடின வாழ்வுக்கு உட்பட்டபோது, எது அவரை பலப்படுத்தினது? யோபு அனைத்தையும் இழந்தபோது எப்படி அவரால் ஸ்தோத்திரம் சொல்ல முடிந்தது? சிலுவைப் பாடுகளின் மத்தியிலும் எது நம் ஆண்டவர் இயேசுவை, பிதாவே இவர்களுக்கு மன்னியும் என்று சொல்லி அன்பு காட்ட வைத்தது? அந்த நல்ல மன நிலையையே ஆண்டவர் நமக்கும் தருவராக! சிலருடைய பாவங்கள் (குடி, போதை, பாலியல் பாவங்கள் போன்றவைகள்) அவர்களது உடல் பிரச்சனைகளுக்கு காரணம். அதற்காக அவர்கள் ஆண்டவரைக் குற்றப்படுத்த முடியாது. குடிக்கப் பழகினவர்கள், அதை நிறுத்தவும் பழகக்கூடுமல்லவா? பரிசுத்த வாழ்வின் விளைவு எவராலும் கொடுக்க முடியாத மகிழ்ச்சியின் வாழ்வு அல்லவா? தேவனாகிய கர்த்தரிடமிருந்து வரும் நன்மைகள், தீமைகள் அனைத்தையும் சமாதானத்தோடு ஏற்றுக்கொண்டால், நிச்சயமாகவே வாழ்வு முழுதும் மகிழ்ச்சியே! அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன். (ஆபகூக் 3:17,18) ஆமென்! |
0 comments:
Post a Comment