ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது. (வெளி 19:16) ராஜாதிராஜாவுக்கே மகிமை! நம் ஆண்டவர் இயேசுவே ராஜாதிராஜாவும், கர்த்தாதி கர்த்தாவுமானவர். நாம் அவர் ராஜ்ஜியத்தின் புத்திரர் அதாவது இளவரசர்கள் / இளவரசிகள். நம் தகப்பன் ராஜா அல்ல, ராஜாதிராஜா என எழுதப்பட்டிருக்கிறது. யோசித்துப் பாருங்கள். உண்மையாகவே நம் இயேசு ராஜாதிராஜாவாக இருந்தால், அவரது பிள்ளைகளான நமக்கு ஏன் வறுமை? ஏன் பணக் கஷ்டம்? ஏன் போராட்டங்கள்? ஏன் சுபிட்சமில்லாத வாழ்க்கை? அவர் ராஜாதிராஜா என்பது சரிதான். நாம்தான் அவருடைய ஆளுகைக்குள் இல்லை! நாம் அவரது ஆளுகைக்கு உட்படாதவரையில் மெய்யான சந்தோஷமோ, சமாதானமோ அடையப்போவது இல்லை! “அதற்கு வேதபாரகன்: சரிதான், போதகரே, நீர் சொன்னது சத்தியம்; ஒரே தேவன் உண்டு, அவரைத்தவிர வேறொரு தேவன் இல்லை. முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழுப் பலத்தோடும் அவரிடத்தில் அன்புகூருகிறதும்,தன்னிடத்தில் அன்புகூருகிறதுபோல் பிறனிடத்தில் அன்புகூருகிறதுமே சர்வாங்கதகனம் முதலிய பலிகளைப்பார்க்கிலும் முக்கியமாயிருக்கிறது என்றான். அவன் விவேகமாய் உத்தரவுசொன்னதை இயேசு கண்டு: நீ தேவனுடைய ராஜ்யத்துக்குத் தூரமானவனல்ல என்றார்.(மாற்கு 12:32-34) அந்த வேதபாரகனுக்கு கர்த்தர் சொன்னதைப் பாருங்கள். நீ தேவனுடைய ராஜ்யத்துக்குத் தூரமானவனல்ல! அப்படியானால் அவன் தேவனுடைய ராஜ்ஜியத்திக்கு அருகில் இருக்கிறான் ஆனால், இன்னும் உட்படவில்லை! நாமும் கூட அந்த வேதபாரகனைப்போலவே, கர்த்தரின் வார்த்தைகளை அறிந்திருக்கிறோம். அவரின் பிரமாணங்கள் தெரியும். ஆனால் அதற்கு கீழ்ப்படியாதவரையில் நாம் தேவனுடைய ராஜ்ஜியத்திற்கும் அவரது ஆளுகைக்கும் உட்பட்ட குடிமக்கள் அல்லர். அப்படியிருக்கும்போது, நாம் நமக்கு தெரிந்தோ தெரியாமலோ பிசாசின் ராஜ்ஜியத்துக்கு உட்பட்டவர்களாக, அவனது ஆளுகைக்கு கீழ்ப்பட்டவர்களாக இருக்கிறோம். கர்த்தருக்குப் பிரியமில்லாதவைகளை விட்டு விலகினாலே போதும், நாம் அவருடைய ஆளுகைக்குள் வருவதற்கு. ராஜாதி ராஜா இயேசு கிறிஸ்து நம்மை அன்போடு அழைகிறார். இயேசு எப்படிப்பட்ட ராஜா, அவர் பிள்ளைகளுக்கு கிடைப்பது என்ன? அ) அவர் நீதியின் ராஜா – நமக்கு நீதி கிடைக்கிறது (எபி 7:2) ஆ) அவர் சாலேமின் ராஜா, சமாதானத்தின் ராஜா – நமக்கு சமாதானம் (எபி 7:2) இ) அவர் இஸ்ரவேலின் ராஜா – நாம் அவர் ஜனங்கள் ( யோவான் 1:49) ஈ) அவர் சதாகாலமும் ராஜா – நமக்கு சீரான வாழ்வு(சங்கீ 10:16) உ) அவர் என் ராஜா – நம்மை தனிப்பட்ட முறையில் அறிந்தவர் ( சங்கீ 84:3) ஊ) அவர் பூமியனைத்திற்கும் ராஜா – நாம் எந்த மூலையில் இருந்தாலும் அவரே நம்மை ஆளுவார். (சங்கீ 47:7) எ) அவர் பரலோகத்தின் ராஜா – நம்மைப் பரலோகில் கொண்டு சேர்ப்பவர் (தானி 4:37) அல்லேலூயா, நாம் இயேசு ராஜாவின் ஆளுகைக்குள் வந்தால் போதும். நம் சாபங்கள் மாறும். பிரச்சனைகள் தீரும். எல்லாப் போராட்டங்களுக்கும் ஒரு முடிவு வரும்! இப்போதே வருவோமா? முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும். (மத் 6:33) |
0 comments:
Post a Comment