நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார் (சங்கீதம் 34:19) விடுவிக்கிற ஆண்டவருக்கே மகிமை! துன்மார்க்கருக்கு அல்ல, நீதிமான்களுக்குத்தான் அனேக துன்பங்கள் வரும். அனேகம் என்னும்போது, சில சமயங்களில் அவை எண்ணக்கூடாதவகளாகும். ஆம் ஒன்று முடிந்தால் இன்னொன்று என துன்பங்கள் நம்மைத் தொடர்கின்றன. ஆனால் பாருங்கள், எந்த வகையான; எப்பேர்ப்பட்ட துன்பங்களானாலும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை (நம்மை) விடுவிப்பார்! அல்லேலூயா! கர்த்தர் நம்மை துன்பங்களிலிருந்து விடுவிக்க வேண்டுமெனில் நீதிமான்களாயிருப்பது மாத்திரமல்ல, துன்பங்களின் நடுவில் நாம் செய்யவேண்டியவைகளும் உண்டு. இதுவரை நாம் அவைகளை முயற்சித்து இருக்க மாட்டோம். வேதத்திலிருந்து ஒரு சம்பவத்தை தியானித்து நாம் என்ன செய்ய வேண்டும் என அறிவோம். அப்போஸ்தலர் 16:16-34 வசனங்களில் பவுல், சீலா ஆகியோர் சிறைச்சாலையில் இருந்ததையும், பிறகு அவர்கள் விடுதலைபெற்றதையும் வாசிக்கிறோம்.(வாசித்துப் பார்த்து பயன்பெறுங்கள்). நம்மையும் இன்று அனேக சிறைகள் சூழ்ந்து இருக்கலாம். கடன்கள், வியாதிகள், பாரங்கள், தற்கொலை எண்ணங்கள், குடும்ப போராட்டங்கள், எதிர்கால பயங்கள் போன்ற சிறைகள். அனைத்திலிருந்தும் நமக்கு விடுதலை கொடுக்கவே, விடுதலை நாயகன் இயேசு கிறிஸ்து நம்மோடு இடைப்படுகிறார். சிறையிலிருந்து விடுதலை பெற அவர்கள் செய்தது என்ன? நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். (25) கால்கள் தொழுமரத்தில் மாட்டப்பட்டிருந்தன. கைகள் கட்டப்பட்டு இருந்தன. அவர்களால் அந்த சூழ் நிலையில் குனியக்கூட முடியாது. ஆனாலும் ஜெபித்தார்கள், தேவனைத் துதித்தார்கள், பாடினார்கள். நடந்தது என்ன தெரியுமா? பூமி அதிர்ந்தது! பொதுவாக பூமி அதிர்ந்தால் சேதம்தான் உண்டாகும். ஆனால், அதையும் கர்த்தர், தம் பக்தர்களைக் காப்பாற்ற பயன்படுத்தினார் பாருங்கள். அவர் நம்மையும் விடுவிப்பது நிச்சயம்! கதவுகள் திறவுண்டது! யாரும் திறக்கவில்லை. அவைகளாகவே திறவுண்டது. ஆம் நம்மைச் சுற்றியுள்ள சிறைகள், அவைகளாகவே காணாமல் போகப்போகின்றன. எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று! பவுல், சீலா ஆகியோரின் செயல்கள், அங்கே கட்டப்பட்டிருந்தோர் அனைவருக்கும் விடுதலை கொடுத்தது. நமது ஜெபமும் துதியும் நமக்குமட்டுமல்ல, நம்மைச் சார்ந்த அனைவருக்கும் விடுதலை கொடுக்கப் போகிறது. அல்லேலூயா! அவர்கள் விடுதலை பெற்றபிறகு, அப்பாடா விடுதலை கிடைத்துவிட்டது என்று ஓட்டமாய் ஓடவில்லை. தற்கொலை செய்துகொள்ளப்போன சிறைச்சாலைக்காரனுக்கு சுவிசேஷம் சொன்னார்கள். சிறைப்படுவதற்கு முன்னும் சுவிசேஷம், பின்னும் சுவிசேஷம், சிறையிலோ ஜெபமும், துதியும்! இவைகள்தான் நமக்கு இன்று தேவை! இவர்களது சுவிசேஷ அறிவிப்பால், சிறைச்சாலைக்காரன் குடும்பத்தோடு பாவம் என்கிற சிறையிலிருந்து விடுதலை பெற்றதோடு, மனமகிழ்ச்சியும் பெற்றார்! கர்த்தருக்கே மகிமை! நம்மால் பலரது சிறை முறிபடுவது தேவனுடைய சித்தம் என அறிவோம். நாம் நம்மையே நொந்துகொள்ளாமல், இப்போதே முழங்கால் படியிட்டு ஜெபித்து, துதித்து பாடி முயற்சித்துப் பாருங்கள். பிறருக்கு சுவிசேஷம் அறிவிக்கும்படி, கர்த்தர் நம் சிறையை மாற்றுவார். இயேசு கிறிஸ்துவின் பெயரால் நமக்கு இன்றே விடுதலை! Praise the LORD! ‘’ஆகையால், குமாரன் (இயேசு கிறிஸ்து) உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்’’ (யோவான் 8:36) ஆமென்! |
0 comments:
Post a Comment