Jesus christ the WORD for LIFE*
<<மூன்று பதில்கள்>>
உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் எனக்கு மறுஉத்தரவு கொடாதிருக்கிறீர்; கெஞ்சிநிற்கிறேன், என்மேல் பாராமுகமாயிருக்கிறீர். (யோபு 30:20)
ஆறுதலின் தெய்வம் இயேசுவின் பெயரால் வாழ்த்துக்கள். யோபு பக்தன் சொல்வதைப் பாருங்கள். நான் ஆண்டவரை நோக்கிக் கூப்பிடுகிறேன். கெஞ்சுகிறேன்; அனால் ஆண்டவர் பதில்கொடுக்கவில்லை என்கிறார். சரீரத்திலும், உடைமைகளிலும், குடும்பத்திலுல் அவர் பெற்ற இழப்புகளும், பாடுகளும் அவரது ஜெபத்துக்கு கர்த்தர் கொடுத்த பதிலை உணர இயலாமல் செய்துவிட்டது. நாமும் கூட பல வேளைகளில் கர்த்தர் என்னை மறந்துவிட்டார் என்றே எண்ணிவிடுகிறோம்.
ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள். (சங்கீ 65:2)
நமது ஆண்டவருக்கு அனேக பெயர்கள் உண்டு என்றாலுல் மேற்காணும் வேதபகுதியில் தன் கர்த்தருக்கு பக்தன் அளிக்கும் பெயரைப் பாருங்கள்! ‘’ஜெபத்தைக் கேட்கிறவரே’’ என்று அழைக்கிறார். ஆம் நம் தேவன் மெய்யாகவே நம் ஜெபத்தைக் கேட்கிறவர்தான். மேலும் நம் ஜெபத்திற்கு பதில் கொடுப்பவரும் கூட. நாம்தான் அவரது பதிலைப் புரிந்து கொள்ளவேண்டும். ஜோசியம் பார்ப்பதுபோல வேதத்தை திடீரென திறந்து முதலில் கண்ணில்படும் வசனத்தை பதிலாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
நம் ஜெபத்துக்கு ஆண்டவர் அனேகமாக மூன்று விதமான பதில்களையே அளிக்கிறார். அவைகள் 1) ஆம், 2) இல்லை, 3) பொறு என்பவைகளே. மேலும் சில சமயங்களில் ஆண்டவர் அமைதியாகவே இருந்து விடுகிறார்.
ஆம் என்ற பதிலை ஆண்டவர் எப்போதுதருகிறார்? நாம் அனைத்தையும் அவரது விருப்பத்தின்படி ஜெபிக்கும்போதுதான்! அதிகபட்சமாக, நாம் தேவ சித்தத்தை உணராமல் நம்முடைய விருப்பத்தையே முன்வைத்து விடுவதால், இல்லை என்ற பதிலையே பெறுகிறோம். நாம் எதிர்பார்க்காத பதிலாய் அது அமையும்போது சோர்ந்து விடுகிறோம். மாறாக நம்மை முற்றிலும் கர்த்தரின் கரத்தில் ஒப்புவிக்கும்போது நம்வாழ்வை அவரே பொறுப்பேற்று கொள்கிறார். நாம் கர்த்தரின் கரத்தில் அலங்காரமான முடியாய் இருப்போம்.
எப்போதெல்லாம் ஆண்டவர் அமைதியாகவே இருக்கிறார் என்றால், சில பிரச்சனைகளை நாமாகவே தீர்த்துக்கொள்ள முடியும் என்று அவர் நம்மை நம்புகிறார். நாமோ என்னால் முடியவில்லை முடியவில்லை என்று பொருமிவிடுகிறோம். சற்று சிந்திப்போம். நாம் பிறந்ததுமுதல் இன்றுவரையில் அனேக காரியங்களைத் தாண்டிவந்திருப்போம். பல போராட்டங்கள்; இழப்புக்கள், கைவிடப்பட்ட வேளைகள். கர்த்தரின் கிருபை மட்டும் நம்மை காத்திருக்காவிட்டிருந்தால் இன்று நாம் உயிரோடு இருப்போமா? நமக்கே தெரியாமல் கர்த்தர் நம்மை சுமந்துகொண்டு வந்திருக்கிறார் என்பதே உண்மை!
இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார். (சங்கீ 34:6) என்ற வசனத்தின்படி கர்த்தர் நம்முடைய நம் கூப்பிடுதலைக் கேட்டு, இடுக்கண்கள், நோய்கள், கட்டுகள், எல்லாவற்றையும் நம்மைவிட்டு நீக்கி இரட்சித்து, சமாதானத்தாலும், மகிழ்ச்சியினாலும் நம்மை நிரப்புவது நிச்சயமே!
தொடர்ந்து விசுவாசத்தோடு கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவோமா? கர்த்தர் நம் ஜெபத்துக்கு பதில் கொடுக்க ஆவலாய் காத்திருக்கிறார்.
ஆமென்!
(குறிப்புகள்:
தின தியானங்களை உங்கள் இமெயிலில் பெற உங்கள் இமெயில் முகவரியை graceministriestpr@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.
முந்தைய நாள் தியானங்களை wordforlifetamil.blogspot.com என்ற முகவரியில் படிக்கலாம். படித்துப் பயன்பெறுவதோடு
இவைகளை குறைந்த பட்சம் ஒருவருக்காவது பகிர்ந்து எங்களோடு கர்த்தரின் ஊழியத்தில் இணையுங்கள்!)
For WORD for LIFE*
By GRACE ministries
(+91 99524 27477, +91 99945 99677, +91 99940 16570)
Web id: wordforlifetamil.blogspot.com
Email : graceministriestpr@gmail.com
0 comments:
Post a Comment