12 Apr 2013


Jesus christ  the  WORD  for  LIFE*
<<கிறிஸ்துவைப் போல பொறுமை>>

நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல்,
பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும்
இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது. (யாக்கோபு 1:4)

அன்பு நிறைந்த ஆண்டவர் இயேசுவின் பெயரால் வாழ்த்துக்கள்! மிகவேகமாகச் சுழன்றுகொண்டிருக்கும் இந்த உலகத்தில் அனைத்தையுமே மிகவேகமாக செய்துமுடிக்க வேண்டிய ஆவலும், கட்டாயமும் நம்மை உந்தித் தள்ளுகிற இந்த நாட்களில் பொறுமை குறித்த காரியங்கள் எவரிடமும் எடுபடாது என்றாலும், அந்த பொறுமையின்றி கர்த்தரின் காரியங்களை அறிவதும், ஆவிக்குரிய வாழ்வில் வளர்வதும் கூடாத ஒன்றே!
   மேற்காணும் வேத வார்த்தையின் படி, நாம் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யவேண்டும் என நமது ஆண்டவர் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.
எப்போதுமே நம் ஆண்டவர் புதிதான ஒரு காரியத்தை செய்யும்படி நம்மை வற்புறுத்தாமல், தாமே அவ்வாறு வாழ்ந்து காட்டி, அதனையே பின்பற்ற சொல்லுகிறார்.
நாமோ ஒருத்தர் நம்மை ஒரு கேள்வி கேட்டுவிட்டால், நாம் ஒன்பது கேள்வி கேட்காமல் விடமாட்டோம் அல்லவா? எங்கும் எதிலும் பொறுமையே இல்லை.

இப்படியிருக்க, சகோதரரே, கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான்.
நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே. (யாக்கோபு 5:7,8)
உலகபிரகாரமாக ஒரு வேலையின் பலனைப் பெறுவதற்கு நீடியபொறுமையோடு காத்திருக்கிறோமே! பரலோக பலனைப் பெறவும் அத்தகைய பொறுமை மிக அவசியமே!
உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள். (லூக் 21:19)
ஆம் பொறுமை நம் ஆத்துமாக்களை நரகத்தினின்று காக்கும் என அறிந்து பொறுமையில் வளர்வோம்.
தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும்.. (ரோமர் 15:4)
என்று வாசிக்கிறோம். தேவவசனம் நமக்கு பொறுமையைக் கொடுக்கிறது.
உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள். (ரோமர் 12:12) என தேவவார்த்தை நமக்கு கற்றுகொடுக்கிறது. நாம் படுகிற உபத்திரவங்கள் தேவனுடைய ராஜ்ஜியத்திற்கு செல்லும் இனிய வழியே என அறிந்து பொறுமையை கடைபிடித்தால் நிச்சயம் பரலோக பரிசு உண்டு. அவசரப்படுகின்ற காரியங்கள் நிச்சயமாக அவதியில்தான் முடியும்.
ஆபிரகாம் ஐயாவின் பொறுமை, யோபு பக்தனின் பொறுமை, இஸ்ரவேலரின் முறுமுறுப்புகளுக்கு இடையே மோசேயின் பொறுமை, சிலுவை மரணம் வரை நம் இயேசு ராஜாவின் பொறுமை என அடுக்கிக்கொண்டே போகலாம்.
நாம் மனந்திரும்புவோம் என ஆண்டவர் இந்த நொடிபொழுது வரையில் நம்மீது நீடிய பொறுமையாய் இருக்கிறாரே! அது மிகுந்த கிருபை அல்லவா?
கர்த்தர் உங்கள் இருதயங்களைத் தேவனைப்பற்றும் அன்புக்கும் கிறிஸ்துவின் பொறுமைக்கும் நேராய் நடத்துவாராக. (2 தெச 3:5)
பொறுமையாய் வாழ்ந்து அருமையானதை ஆண்டவரின் கரங்களில் பெற்றிட நம்மை தகப்பன் கையில் அர்ப்பணிப்போம்!

ஆமென்!

(குறிப்புகள்:
தின தியானங்களை உங்கள் இமெயிலில் பெற உங்கள் இமெயில் முகவரியை graceministriestpr@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.
முந்தைய நாள் தியானங்களை wordforlifetamil.blogspot.com என்ற முகவரியில் படிக்கலாம். படித்துப் பயன்பெறுவதோடு
இவைகளை குறைந்த பட்சம் ஒருவருக்காவது பகிர்ந்து எங்களோடு கர்த்தரின் ஊழியத்தில் இணையுங்கள்!)

0 comments:

Post a Comment