22 Apr 2013

Jesus christ  the  WORD  for  LIFE*

<<<விசுவாசத்தோடு!>>>

ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான். அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக. (யாக் 1:6,7)

கர்த்தரின் பெயர் மகிமையுறுவதாக!

கிறிஸ்தவ வாழ்வில் ‘’விசுவாசம்’’ மிக மிக முக்கியமான ஒன்று. விசுவாசமில்லாமல் வேதத்தை வாசிப்பது வீண். விசுவாசமில்லாமல் ஜெபிப்பது வீண். ஏனென்றால் விசுவாசமில்லாத இடத்தில் தேவன் செயல்படுவதில்லை! ஆனாலும், நம் அன்பு ஆண்டவர் இரக்கம் நிறைந்தவராதலால், நம் விசுவாசக் குறைவுகளை நீக்கி நமக்கு உதவி செய்கிறார்.

நீ கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தோடும் அன்போடும் என்னிடத்தில் கேட்டிருக்கிற ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தைக் கைக்கொண்டிரு. (2தீமோ 1:13)

     வேதவசனங்களை வாசித்து, விட்டுவிடாமல், விசுவாசத்தோடே கைக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நற்பொருளாகிய கிறிஸ்து நம் இருதயத்தினுள் வாசம்பண்ணுவார்.

விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி (எபே 3: 17) என வாசிக்கிறோம்.

அப்பொழுது, சீஷர்கள் இயேசுவினிடத்தில் தனித்துவந்து: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று கேட்டார்கள். அதற்கு இயேசு: உங்கள் அவிசுவாசத்தினாலேதான்; என்றார். (மத் 17:19,20)

இன்றும் நாம் நம்மைச் சுற்றியிருக்கிற சிறையிலிருந்து விடுபட விரும்புகிறோம். சாபத்திலிருந்து விடுபட விரும்புகிறோம். சாத்தானின் போராட்டங்களை மாற்றவிரும்புகிறோம். ஆனாலும் முடிவதில்லை. ஒழுங்காய் ஆலயம் செல்கிறோம். வேதம் வாசிக்கிறோம். ஆனாலும் எதுவும் நடந்தாற்போல் தெரியவில்லை! காரணம் ‘’அவிசுவாசம்’’. நாம் நம் கர்த்தரை சந்தேகப்படலாமா? அவர் மனிதனா? அவர் பொய் சொல்வதில்லை. வாக்குபண்ணினவர் உண்மையுள்ளவர். நிச்சயமாகவே அவர் நம்மை  விடுவிப்பார். ஆசீர்வதிப்பார். உயர்த்துவார்.  

விசுவாசத்தினாலே எரிகோ பட்டணத்தின் மதில்கள் ஏழுநாள் சுற்றிவரப்பட்டு விழுந்தது (எபி 11:30) விசுவாசத்தோடு பொறுமையாய் காத்திருப்பதும் அவசியமே! ஏழு நாட்களில் பதின்மூன்று முறை சுற்றப்பட்ட பின்பே எரிகோமதில் விழுந்தது. முதல் நாளிலேயே விழுந்திருந்தால் அவர்கள் கர்த்தரை தொடர்ந்து துதித்திருக்க மாட்டார்கள். நம்முடைய பாடுகள் நீங்கவும், பயங்கள் மாறவும், இருக்கிற தாழ்விலிருந்து கரம் பிடித்து எடுத்து உயர்த்தவும் ஆண்டவர் ஒரு நாளைக்குறித்திருக்கிறார் என்பது உண்மை. அது நம்முடைய விசுவாசம் கிரியை செய்யும் நாளே! விசுவாசமில்லாத இடத்தில் இரட்சகர் இயேசு அற்புதம் செய்யவில்லை. விசுவாசம் செயல்பட்ட இடத்திலோ மரித்தவன் கூட உயிருடன் எழுந்து நடந்தான்.  
மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்.(மத் 21:22)

  
நமது விசுவாசம் ஒழிந்து போகாதபடி கர்த்தர் நமக்காக வேண்டுகிறார். நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார். (லூக் 22:32) சர்வவல்லமையுள்ள ஆண்டவர் நமக்காக நம்முடனே இருக்கிறார். எந்த ஒரு சூழ்நிலையிலும் சோர்ந்திட வேண்டாம். வேதத்தைப் படித்து, தியானித்து, விசுவாசித்து, பெற்றிடுவோம் அனைத்தையும். அல்லேலூயா!

 
பரிசுத்தஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக (ரோமர் 15:13)
ஆமென்!

 
(குறிப்புகள்:

தின தியானங்களை உங்கள் இமெயிலில் பெற உங்கள் இமெயில் முகவரியை graceministriestpr@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

முந்தைய நாள் தியானங்களை wordforlifetamil.blogspot.com என்ற முகவரியில் படிக்கலாம். படித்துப் பயன்பெறுவதோடு

இவைகளை குறைந்த பட்சம் ஒருவருக்காவது பகிர்ந்து எங்களோடு கர்த்தரின் ஊழியத்தில் இணையுங்கள்!)


 
For WORD for LIFE*

By GRACE ministries

(+91 99524 27477, +91 99945 99677, +91 99940 16570)

Web id:  wordforlifetamil.blogspot.com

Email  : graceministriestpr@gmail.com

0 comments:

Post a Comment