கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.(சங்கீதம் 34:8) இயேசு நல்லவர்! உணவில் ருசி : நாம் உண்ணும் உணவுகளில் ருசி மிகவும் முக்கியமானது. ருசியில்லாது யாரும் உண்ண விரும்பமாட்டோம். ருசியான பதார்த்தங்களே அனைவராலும் விரும்பப்படும். திருமண வைபவங்களில் உணவு ருசியாக மட்டும் இல்லையென்றால் போதும், திருமண நிகழ்வே சரியில்லை எனப் பேசிவிடுவார்கள். அந்த அளவுக்கு நமது நாக்கு ருசிக்கு ஏங்குகிறது. இது உணவுக்கான ருசி. பாவத்தின் ருசி: ஒவ்வொரு பாவத்துக்கும் ஒவ்வொரு ருசி உண்டு. ஆம் சாத்தான் அப்படி சொல்லித்தான் அனேகரை ஏமாற்றி வைத்திருக்கிறான். அது பெரும்பாலும் அவர்களுக்குத் தெரியாது. ருசி கண்ட பூனை சும்மா இருக்காது – என்பது பழமொழி. அப்படி ஒரு சில பாவங்களின் ருசி கண்டவர்கள் மீண்டும் மீண்டும் அதை செய்யத்தூண்டும் இச்சையினால் பிடிக்கப்பட்டு சிக்கிக்கொள்கிறார்கள். அவர்களுடைய வாழ்வோ மிக மிக கசப்பாகவே இருக்கும். சமாதானம் இருக்காது. சந்தோசம் இருக்காது. ஏதோ பறிகொடுத்ததைப் போலவே இருப்பார்கள். குறிப்பிட்ட பாவத்துக்குள் இருக்கும்வரை அந்த ருசி எனும் மயக்கத்திலேயே இருப்பார்கள். பிறகோ மீண்டும் கசப்பான வாழ்வே! வாழ்வில் ருசி: வெறுமனே வேதத்தை வாசிப்பதாலோ, நானும் செல்கிறேன் என்று ஆலயம் போய்வந்தாலோ வாழ்வில் எந்த ருசியும் இருக்காது. அது ஒரு உண்மையான கிறிஸ்தவ வாழ்வும் கிடையாது. அது எந்த அளவுக்கு கர்த்தரை ருசி பார்க்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. அது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோடு அனுதினமும் வாழ்கிற அனுபவமே! எப்படி நம் வாழ்வில் கர்த்தர் நல்லவர் என ருசிப்பது? அ) பாவங்களை மன்னிக்கிற இயேசு நல்லவர் : “மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி. எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான் சொன்னேனே, அவர் இவர்தான் (யோவான் 1:29,30) என்று கூறினார். ஆம் அவர் பாவங்களைச் சுமந்து தீர்த்து விடுதலை கொடுப்பவர் என்று கண்டுகொண்டார். ஆம் இயேசு ஒருவருடைய பாவங்களை மன்னிக்கும்போது அவருடைய வாழ்வு சுவையானதாக மாறிடும் என்பது உண்மை! இயேசுவும் நம் பாவங்களை மன்னிக்க தயவுள்ளவரே! இப்படியிருக்க, கர்த்தர் தயையுள்ளவரென்பதை நீங்கள் ருசிபார்த்ததுண்டானால்சகல துர்க்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிட்டு, நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.(1பேதுரு 2:1-3) ஆ) வியாதிகளை மாற்றுகிற இயேசு நல்லவர்: நாம் வியாதிகளோடும், அவை தருகின்ற வேதனைகளோடும் வாழ்வது தேவனுடைய சித்தமல்ல. அவருடைய சித்தம் நாம் சுத்தமாகவேண்டும் என்பதே! பாவங்கள் மன்னிக்கப்படுவதன் மூலமே ஒருவருடைய வியாதியை ஆண்டவர் சுகப்படுத்த முடியும். எனவே, இயேசுவிடம் பாவங்களை அறிக்கையிட்டு மனம் திரும்பினால், எந்த ஒரு வியாதியையும், பெலவீனங்களையும் கர்த்தர் நம்மைவிட்டு எடுத்துப் போடுவார். ஏனென்றால் நாம் சுகமாய் இருக்கவேண்டும் என்றுதான் அவர் உச்சபட்சமாக மரணத்தையே ருசி பார்த்தார். “என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்.(எபி 2:9) இ) நம்மைப் பரலோகம் சேர்க்கிற இயேசு நல்லவர்: நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.(யோவான் 14:3) என்பது அவர் கொடுத்த வாக்கு அல்லவா? நாம் வாழ்கிற இந்த வாழ்வில் கர்த்தராகிய இயேசுவை ருசிபார்த்து (பரிசுத்தமான) சுவையான வாழ்வு வாழ்ந்தால் மட்டுமே பரம ஈவாகிய பரலோகவாழ்வு கிடைக்கும். நமக்கு இங்கே கிடைத்திருப்பது வாழ்வு அல்ல! கர்த்தருக்காக வாழ்வதற்கான ஒரு வாய்ப்பு ஆகும். அதிகமானோர் கர்த்தரை தங்கள் வாழ்வில் ருசித்திருந்தும், மீண்டும் கசப்பான பாவத்திற்குள் சிக்கி பின்மாற்றத்திலே கிடக்கிறார்கள். மீண்டும் கர்த்தரிடம் திரும்புவோம். மீண்டும் வாழ்வு ருசிக்கும். பரிசுத்த ஆவியினால் உண்டாகும் சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் மீண்டும் நிரப்பப்படுவோம். ஆமென். ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரமஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்.(எபி 6:4,5) |
0 comments:
Post a Comment