WORD for LIFE*
எல்லாம் முடிஞ்சு போச்சு!
இரட்சகர் இயேசுவின்பெயரால் வாழ்த்துக்கள்!
அவ்வளவுதான், எல்லாம் முடிஞ்சு போச்சு என்று அங்கலாய்த்துக்கொண்டு இருக்கிறீர்களா? இனி வாழ்க்கையில் என்ன செய்து பிழைப்பது என்று கையைப் பிசைந்து கொண்டு இருக்கிறீர்களா? அல்லது செய்கிற வேலையில் பிரச்சனை மேல் பிரச்சனையா? குடும்பத்திலும் போராட்டமா? உயிரோடு இருப்பதைவிட செத்துப்போய்விட்டால் பரவாயில்லை என்று தோன்றுகிறதா?
அல்லேலூயா! சர்வ வல்லமையுடைய கர்த்தர் உங்கள் வாழ்வில் செயல்படவேண்டிய நேரம் இதுதான்!
அன்பு இரட்சகர் இயேசு உங்களைப் பார்த்து, உங்கள் கரங்களை அன்போடு பற்றிகொண்டு சொல்கிறார்! ‘’ பயப்படாதே! நான் உன்னோடு இருக்கிறேன்’’ என்று! உங்களுக்காக, நான் எல்லாவற்றையும் சிலுவையிலே செய்து முடித்துவிட்டேன். இனி என் கிருபையோடு, ஒரு புதிய வாழ்வை ஆசீர்வாதமாய் துவங்குங்கள் என்று நம்மை அழைக்கிறார்!
தங்களது வாழ்வில் கண்ட பிரச்சனை அல்லது தேவைகளின் உச்சகட்ட நேரத்தில் ஆண்டவரைப் பற்றிகொண்டு உலகத்தில் வெற்றிகொண்ட காட்சிகள் அனேகம்….
1. ஆபிரகாம் – (எபி 11:12) சரீரஞ்செத்தவனென்று எண்ணத்தகும் ஆபிரகாமினாலே, வானத்திலுள்ள பெருக்கமான நட்சத்திரங்களைப்போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப்போலவும், மிகுந்த ஜனங்கள் பிறந்தார்கள்
2. யோபு - (யோபு 42:12)கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்;
எல்லாம் இழந்தபின்பும்; சரீரமும் முடிந்தபின்பும்; மனைவியும் கர்த்தரை தூஷிக்க சொன்னபின்பும்… யோபின் முடிவு இருமடங்கு ஆசீர்வாதத்தோடு பரிபூரணம் பெற்றதே!
3.யோசேப்பு – உடன் பிறந்த சகோதரர்கள் கைவிட்டார்கள். அடி; குழி; அடிமை வாழ்வு; பாலியல் சோதனை; சிறை என பலவாறு துன்பங்கள். ஆனால் முடிவு? அரசனைப்போன்ற வாழ்வு அல்லவா?
4.தாவீது – பெற்ற மகனால் துரத்தப்பட்டு, குகையில் ஒளிந்த நிலை. எதிரிகள் தாவீது ராஜாவின் அனைத்தையும் கொள்ளையடித்துப் போனார்கள்.
முடிந்துபோனாரா? சமஸ்த இஸ்ரவேலின் மேலும் ஆளுகை செய்தாரல்லவா?
இவர்கள் மட்டுமல்ல! அனேகர் இன்றும் உண்டு. ஆனால் அவர்கள் அனைவருமே தங்கள் போராட்ட நேரங்களில் கர்த்தராகிய தேவனையே உறுதியாய் பிடித்துக் கொண்டார்கள். கர்த்தர் அவர்களுடைய வாழ்வைப் பொறுப்பேற்றுக்கொண்டார். வாழ்ந்து செழித்தார்கள்!
அன்பானவர்களே, இப்போது உங்கள் வாழ்வை கர்த்தரின் கரத்தில் கொடுத்துவிடுங்கள். அவருக்கு பிரியமில்லாத காரியங்களை மாத்திரம் விட்டுவிடுங்கள். அவர் எல்லாம் பார்த்துக்கொள்வார்!இயேசு இன்றும் நல்லவரே!
முழு இருதயத்தோடு அவரிடம் மன்றாடி ஜெபித்தால், உங்கள் வாழ்வு செழிக்கப்போவது நிச்சயம்!
‘’நிச்சயமாகவே முடிவு உண்டு, உன் நம்பிக்கை வீண் போகாது’’ – (நீதி 23:18)
ஆமென்! Praise the Lord!
0 comments:
Post a Comment