அப்பொழுது ஒருவன் வந்து, அவரை (இயேசுவை) நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார். (மத் 19:16,17) நேர்த்தியான ஆண்டவருக்கு மகிமை! தேவனாகிய கர்த்தரின் சுவிசேஷத்தையும், அவரது வார்த்தைகளையும் உலகிற்கு எடுத்துரைக்க வேண்டியதும், இயன்றமட்டும் ஊழியம் செய்து ஆத்தும அறுவடை செய்யவேண்டியதும்; மொத்தத்தில் நாம் ஒவ்வொருவரும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து- வைப்போல மாறுவதுமே நம் ஒவ்வொருவரின் மேலும் உள்ள தேவசித்தம். கர்த்தரின் வார்த்தையின்படி இயேசுக் கிறிஸ்துவை சொந்த இரட்சகராகக் கொண்ட ஒவ்வொருவரும் அவருடைய ஊழியரே! அதே நேரத்தில் எல்லாவகையான ஊழியர்களும் ஒருவருக்கு ஒருவர் சகோதரரே! ஊழியங்களிலே மேன்மையும் இல்லை. தாழ்மையும் இல்லை. அனேக வரம் பெற்ற தேவஊழியர்களைப் பார்த்தால், தங்களுக்குத் தாங்களே போட்டுக்கொள்ளும் பட்டங்கள், பெயர் பிரஸ்தாபங்கள் அதிகம். அது பிற விசுவாசிகளாகிய சபைமக்களுக்கும் அவர்களுக்கும் பெரிய இடைவெளியை ஏற்படுத்துகிறதே! மாண்புமிகு அரசியல்வாதிகளைப் போல செயல்படுவது நன்றோ? நாசரேத்தூரின் தச்சராக அன்றோ இரட்சகர் இயேசு பிறந்தார். அரண்மனைத் தொட்டில் அல்ல அவர் விரும்பியது. தம்மை ராஜாவாக்க மனதாயிருந்த கூட்டத்தைக் கண்டு விலகி ஓடினவரல்லவா நம் ஆண்டவர். தனக்குக் கிடைத்த “நல்ல போதகர்” என்ற பட்டத்தையும் தம் பிதாவுக்கே கொடுத்தாரே! (மத் 19:16,17) நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான். ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள். நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன் (யோவான் 13:13-15) என்று தாழ்மையை வாழ்ந்தல்லவா காட்டினார். விசுவாசியிடம் வித்தியாசம் பார்க்கும் / காட்டும் ஊழியர் ஊழியரோ? ஆண்டவர் என்றும்; போதகர் என்றும், குரு என்றும், பிதா அல்லது தந்தை என்றும், ரபீ என்றும் போற்றுதற்குரியவர் நம் திரியேக தேவனே! பிதாவாகிய தேவன், வார்த்தையாகிய கிறிஸ்துவை மகிமைப்படுத்தினார். இயேசு கிறிஸ்து பிதாவை மகிமைப்படுத்துகிறார். பட்டங்களும், உப பெயர்களும் ஊழியருக்கு அல்ல, சர்வவல்ல தேவனுக்கே உரியது. சகோதரன் அல்லது தேவஊழியர் என்பது மாத்திரம் ஊழியர்களுக்குப் போதுமானது அன்றோ? நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன். (ஏசாயா 42:8) (காதுள்ளவர் கேட்கக் கடவர்). சபை மக்கள் ஊழியர்களைக் கனப்படுத்தவேண்டுமே அன்றி கடவுளாக்கக் கூடாது. யாவருக்கும் முதல் உறவும், முதன்மை உறவும் நம் ஆண்டவரே! வேதத்தை வெறுமனே வாசிக்காமல், கர்த்தர் என்னோடே பேசுகிறார் என்ற உணர்வோடு தியானித்தால்தான் கடைசிகால பொய் உபதேசங்களுக்கும், கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும், மாயமாலங்களுக்கும் தப்பமுடியும். நான் அப்போஸ்தலரெல்லாரிலும் சிறியவனாயிருக்கிறேன்; தேவனுடைய சபையைத் துன்பப்படுத்தினதினாலே, நான் அப்போஸ்தலனென்று பேர்பெறுவதற்கும் பாத்திரன் அல்ல (1 கொரி 15:9) என பவுல் ஐயா அறிக்கை செய்யக்காரணமுண்டு. ஏனென்றால் அவர் கிறிஸ்துவைப் பின்பற்றி, கிறிஸ்துவைப் போல மாறுகின்ற வழியில் இருந்தார். சாது சுந்தர் சிங் என்ற ஊழியரின் சரிதை புத்தகம் வாசித்துப் பாருங்கள். சாது என்ற வார்த்தையின் அர்த்தம் தாழ்மை என்றும், சுயத்தை வெறுத்தவர் என்றும் புரியும். அவர்கள் அப்படித்தான் வாழ்ந்தார்கள்! தேவவார்த்தைக்கு மட்டும் செவிகொடுத்து, மனுஷ சத்தத்துக்கு விடைகொடுத்தால்தான் தேவசித்தம் செய்யமுடியும். நம் வாழ்வு முழுதும் கர்த்தரையே துதிப்போம். கர்த்தரையே உயர்த்துவோம்! நான் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்(யாத் 20:24) ஆமென்! |
0 comments:
Post a Comment