தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர். (சங்கீதம்51:17) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துக்கள்! வீட்டில் அழுக்கான துணிகள் சலவை செய்யப்படுவதைப் பார்த்திருப்போம். துவைக்கும் இயந்திரத்திலோ, கல்லில் அடித்தோ சலவை செய்வார்கள். துவக்கத்திலிருந்து முடிவு வரை கவனித்தால், அந்த அழுக்கான துணி, சுத்தமாக மறுவதற்கு என்ன பாடுபடுகிறது என்பது புரியும். சோப்பு நீரில் நன்றாக ஊறவைத்து, அலசி, இயந்திரத்தில், கல்லில் என சுத்தமாவதற்கு அதுபடும் பாடுதான் என்ன! உலர்த்தப்பட்ட பின்பும் கூட, இஸ்திரியால் சூடு போட்டு, சுருக்கு நீக்கி, பிறகுதான் மிக அழகாக உடுத்தப்படுகிறது. நம்மையும் கூட நம் தேவன் இவ்விதமான கடினப்பாடுகள் வழியே தூய்மைப்படுத்தி பொன்னாக மாற்றி ஏற்றுக்கொள்கிறார். நம் வாழ்வில் எந்த ஒரு கஷ்டமும் இல்லை, நஷ்டமும் இல்லை என்போமாகில், நாம் உண்மையான கிறிஸ்தவ வாழ்வு வாழவில்லை என்றே பொருள்! ஒரு மனிதனுடைய ஆவி எப்போது நொறுக்கப்படும் என்றால், எதிர்பார்த்த காரியங்கள் நடக்காதபோது; எதிர்ப்புக்கள் பெறுகும்போது; உதவிகள் கிடைக்காதபோது; எதற்கு இந்த வாழ்க்கை என தடுமாறும்போது எனப் பட்டியலிடலாம். நொறுங்குண்டு கிடக்கும் நம்மை காண்கின்ற மனிதர்கள் கைவிடுவார்கள். ஆனால் அதேவிதமான நொறுக்குதலுக்குள்ளே தன்னை அர்ப்பணித்த தெய்வம் இயேசு கிறிஸ்து நம்மை கைவிடுகிறவரோ, மறக்கிறவரோ அல்ல! அல்லேலூயா! நாம் படுகிற இந்தப் பாடுகலில் அவர் நம் கரம்பிடித்து நடத்துவார். கஷ்டங்களும், பாடுகளும் நம்மை நொறுக்கும் முன்பு, இருதயத்தை நொறுக்கி (பாவங்களை அறிக்கை செய்து விட்டு விட்டு, முற்றிலும் தாழ்த்தி) கர்த்தரிடம் வந்தால் அவர் நம்மை காப்பாற்றுவார். தேவன் நம்மிடம் எதிர்பார்ப்பது தாழ்மையையே! நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார் (சங்கீதம் 34:18) இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார் (சங்கீதம் 147:3) இயேசுகிறிஸ்து நமக்கு சமீபமாயிருக்கிறார். கவலை வேண்டாம். அவர் நம்மை இரட்சிக்கிறார். குணமாக்குகிறார். காயங்களைக் கட்டுகிறார். அவர் நம் அன்புத்தகப்பன் அல்லவா? அவரது குழந்தைகளாகிய நம் மீது இரக்கம் காண்பியாது இருப்பாரோ? அன்பு இரட்சகர் இயேசுவின் பாதத்தில் இன்றே கதறி, அவர்தரும் பூரண சமாதானத்தைப் பெற்று மகிழ்ச்சியோடு அவரைத் துதிப்போம்! அல்லேலூயா! ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன். (ஏசாயா 66:2) ஆமென்! |
0 comments:
Post a Comment