தேவன் அதை ஆராய்ந்து, விசாரியாதிருப்பாரோ? இருதயத்தின் அந்தரங்கங்களை அவர் அறிந்திருக்கிறாரே. (சங்கீதம் 44:21) மரங்கள், இந்த பூமிக்கு வரங்களாக தேவன் தந்தவை. ஒரு நாட்டினுடைய இயற்கை செழிப்பிற்கு மரங்களே உதவுகின்றன. பசுமை கண்களுக்கு மட்டுமல்ல, அது இருதயத்திற்கும் கூட குளிர்ச்சிதான். ஓங்கி உயர்ந்து நிற்கும் மரங்களுக்கு ஆதாரம் அவைகளின் வேர்களே! ஒரு சில மரங்களின் வேரானது, அம்மரங்களின் உயரத்துக்குத்தக்கதாக இருக்கும் என்கிறது ஒரு ஆராய்ச்சி! கண்களுக்கு மறைவாக இருக்கும் வேர் சரியில்லையெனில், வெளிப்படையாகத் தெரியும் மரம், பலவீனமாக, பயனற்றதாக ஆகிவிடும். தான் எதற்காக இப்பூமியில் வளர்ந்ததோ, அந்த நோக்கம் நிறைவேறாமலே அழிந்துவிடும். மனித வாழ்வின் வேர் போன்றது, அவர்களின் அந்தரங்க (இரகசிய) வாழ்வு! அனேகர் வெளியே மகிழ்ச்சியோடு காணப்படுவார்கள் ஆனால். உள்ளே யாருக்கும் தெரியாமல் அழுவார்கள்! அனேகர் வெளியே பரிசுத்தர் போல இருப்பார்கள்! ஆனால், உள்ளே சாக்கடை வாழ்வாக இருக்கும். வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை வாழ்வு! ஒவ்வொருவரின் வெளிப்புற வாழ்வும், அவர்களின் இரகசிய வாழ்வைச் சார்ந்தே இருக்கும். உங்கள் வெளிப்புற வாழ்வு எப்படியிருக்க ஆசைப்படுகிறீர்கள்? பரிசுத்தமாகவா? ஆசீர்வாதம் பெற்றதாகவா? மகிழ்ச்சியானதாகவா? மேன்மையானதாகவா? நிறைவானதாகவா? நிச்சயம் கிடைக்கும். ஆனால் உங்கள் இரகசிய வாழ்வின் இணைப்பு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு இருக்க வேண்டும்! கர்த்தர் நம் அந்தரங்கத்தைப் பார்க்கிறவர்! வேர் பரிசுத்தமாக இருந்தால், கிளைகளும் பரிசுத்தமாய் இருக்கும் அல்லவா? நம் இருதயத்தின் எஜமானராக இயேசு ராஜா இருந்தால் போதும், நம் வெளிப்புற வாழ்வு சரியாகிவிடும்! இன்றே அவரைப் இறுகப் பற்றிக்கொள்வோம்! அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார் (மத்தேயு 6:4) ஆமென்! |
0 comments:
Post a Comment