இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது. (யோவான் 4:34) ஒரு மனிதன் உயிர்வாழ வேண்டுமானால் அவன் குழந்தையாய் பிறந்ததிலிருந்து தனக்கான உணவை புசித்தாக வேண்டும். குழந்தை பிறந்த சில நிமிடங்களிலிருந்து தனது தாயிடம் பால் குடிக்க ஆரம்பிக்கிறது. மேலும் அன்றிலிருந்து அந்த குழந்தை மரிக்கும் நாள் வரை, அது உயிர்வாழ வேண்டுமானால் ஆகாரம் புசித்தாக வேண்டும். ஒரு வேளை அந்த மனிதன் ஆகாரம் புசிக்க முடியாமல் மரணவேளையில் கோமா நிலையில் உணர்வற்று இருந்தாலும், அந்த மனிதன் மரிக்கும் வரையிலும் குளுக்கோஸாக அவனுடைய உடலினுள் ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. ஏனென்றால் மீண்டும் உயிர்தப்பிப் பிழைக்க அவனுக்கு ஆகாரம் தேவை!
ஒரு ஆவிக்குரிய மனிதன், இயேசுவின் ரத்தத்தினால் தன் பாவங்கள் கழுவப்பட்டு, மறுபடியும் பிறந்ததிலிருந்து, அவன் தேவ சித்தம் செய்தாக வேண்டும். தனது சூழ்நிலை, மரண வேளையாய் இருந்தாலும் தேவ சித்தம் மாத்திரமே செய்யப்படவேண்டும். நாம் கேட்கலாம், மரண வேளையில் எப்படி தேவ சித்தம் செய்ய முடியும்? என்று. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் மரிக்கும் சற்று முன்பும் தன்னோடு சிலுவையில் தொங்கிய ஒரு மனிதனுக்கு சுவிசேஷத்தை அறிவித்து, அவனை இரட்சிப்புக்குள் நடத்தி பிதாவின் சித்தத்தை அங்கு நிறைவேற்றினார். நம்முடைய எந்த சூழ்நிலையிலும்; மரண வேளையிலும் நாம் நம்முடைய சிந்தையில் அசுத்தங்கள் வராதபடி நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய கிருபைகளை தேவன் நம் ஒவ்வொருவருக்கும் தருவாராக! நாம் பரிசுத்தமாய் வாழ வேண்டுமென்பதும் தேவ சித்தமே. அப்படிப்பட்ட தேவசித்தத்தை செய்துமுடிக்கவேண்டும் என நினைப்பது அல்ல! செய்து முடிப்பதே நாம் உண்ணவேண்டிய ஆவிக்குரிய போஜனம்! அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார்.(எபி 10:7) ஆமென்! |
0 comments:
Post a Comment