"இதோ, தேவன் தண்டிக்கிற மனுஷன் பாக்கியவான்" (யோபு 5:17) ஒரு சிறுவனின் தாயும் தகப்பனும், அவனுடைய சிறு வயதிலேயே மரித்துப்போனதால், அச்சிறுவனை அவனுடைய பெரியப்பா எடுத்து வளர்க்கலானார். அவருக்கும் ஒரு சிறு மகன் இருந்தான். அவர் தனது சொந்த மகன் குறும்பு செய்யும்போதெல்லாம் சிறு சிறு அடியும் அடிப்பார். வளர்ப்பு மகனையோ, அவ்வாறு அடிக்காமல், மனம் கஷ்டப்படுவானே என நினைத்து, ஏதேனும் புத்திமதி மட்டும் சொல்லி விட்டுவிடுவார். ஆனால் மற்ற கவனிப்பு முறைகளில் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. அவ்வாறே பல வருடங்கள் உருண்டன. பிள்ளைகள் வாலிபர்கள் ஆனார்கள்! ஒருநாள் அந்த வளர்ப்பு மகன் கடும் சோகத்தில் ஆழ்ந்திருந்தான். கண்ணீரோடு தன் வளர்ப்பு அன்னையிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்ததை அந்த தந்தை கவனித்தார். அவன் இவ்வாறாக சொல்லிக் கொண்டிருந்தான்.. "நீங்கள் என் மீது அன்போடும் பாசத்தோடும் நடந்துகொள்ளவே இல்லை! ஆனால், தம்பியிடமோ மிகுந்த அன்போடு இருந்தீர்கள்! அவனை அடித்தீர்கள், என்மீதோ உங்கள் கரங்கள் படக்கூட இல்லை! நான் என்ன பாவம் செய்தேன் அம்மா! சொல்லுங்கள்!'' என! தந்தை செய்வது அறியாது நின்றார்! ஆம் பிரியமானவர்களே, ஒரு பிரியமான தகப்பனாய் நம் கர்த்தர் இருப்பதால்தான், சில நேரங்களில் அவர் நம்மை நம் தவறுகளுக்காகச் சிட்சிக்கிறார்! அடிக்கிற அவர் கரங்கள், பிறகு நம்மை அணைத்து, காயமும் கட்டுகிறது! நாமோ அதைப் புரிந்துகொள்வதே இல்லை! (அந்த அன்பை கர்த்தரின் உண்மையான பிள்ளைகளால் புரிந்துகொள்ள முடியும்!) இப்போது இருக்கும் எந்த ஒரு இக்கட்டான சூழலையும் கண்டு சோர்ந்து போகவேண்டாம். நாம் ஒரு அன்புத் தகப்பனின் கரங்களுக்குள் இருக்கிறோம்! அல்லேலூயா! தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்.(நீதி 3:12) நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.(வெளி 3:19) ஆமென்! |
0 comments:
Post a Comment