தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, தேவன் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார். (சங்கீதம் 53:2) சர்க்கரை இனிக்கிறது. உப்பு உவர்க்கிறது. பாகற்காய் கசக்கிறது. தீ சுடுகிறது. இவைகள் எல்லமே நமது உணர்ச்சிகளின் அடிப்படையில் நம் உடலால்; உடல் உறுப்புக்களால் உணர்ந்து, அவைகளை நெருங்குகிறோம் அல்லது விலகுகிறோம். அழியப்போகும் உடல் அவ்வளவு எச்சரிக்கையாக இருக்கிறது. ஆனால் இச்சையும் அதன் மூலமாக விளையும் பாவமும் நம்மை நித்திய அழிவாகிய நரகத்துக்கு அழைத்துச் செல்லும் என்ற முக்கியமான உணர்வு நம் ஆத்துமாவுக்கு இல்லை. அல்லது அந்த உணர்வு சற்றேனும் இருக்கிறது ஆனால் நாம் அதைக் கண்டுகொள்வதில்லை.
தேவனாகிய கர்த்தர் அதைக் கண்ணோக்குகிறார் என்பதை அறிவோமா? தேவனைத் தேடுகிற உணர்வு இல்லாததே, நம் ஆத்துமாவை, தனக்கு வரும் அழிவை உணர இயலாமல் செய்துவிடுகிறது. நாம் தேடவேண்டிய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைத் தவிர நாம் தேடும் பணமோ; பொருளோ; உலக மனிதர்களோ; உறவுகளோ நம்மை நித்திய மகிழ்ச்சியாகிய பரலோக வாழ்வுக்கு அழைத்துச்செல்ல முடியாது. அநித்தியமான பாவசந்தோஷங்கள், அழிவுக்கே வழிவகுக்கும்.
அவர்கள் எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; (சங்கீதம் 53:3) ஆம்! வழியாகிய கிறிஸ்துவை விட்டு விலகுகிற யாவரும் கெட்டுப்போனவர்களே! பட்டுப்போன மரம் விறகுக்கு! கெட்டுப்போன உப்பு குப்பைக்கு! வீட்டில் உணவு கெட்டுப்போனால் குப்பையில் கொட்டிவிடுகிறோம். இச்சையினாலே இருதயம் கெடுவது தெரிவதில்லையே! கர்த்தரின் வார்த்தைகள் கண்களுக்கு மறைவாய்ப்போனதே! ஐயோ, என் ஜனம் அறிவில்லாமையால் அழிகின்றதே! உணர்வுள்ள இருதயம் உண்டாக ஜெபிக்கவேண்டுமே! இந்த மாயையான உலகத்தை நாம் ஜெயிக்கவேண்டுமே! கர்த்தராகிய இயேசு நமக்கு உதவி செய்யக் காத்திருக்கிறார். இன்றும் தம் கிருபை மாறாமல் தமது கரத்தை நம்மை நோக்கி நீட்டிக்கொண்டிருக்கிறார். நமது பின்மாற்றங்கள் மாறுவதாக! பரிசுத்தர் இயேசுவை நோக்கிய வாழ்வு நமதாகட்டும்! அல்லேலூயா! அவரிடம் மன்றாடி, பாவமன்னிப்பை பெற்றுகொண்டு அவரை தேடும் உணர்வைப் பெற கர்த்தர் அனைவருக்கும் உதவி செய்வாராக!
ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.(எபி 4:16) ஆமென்! |
0 comments:
Post a Comment