தேவனே நியாயாதிபதி; ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார். (சங்கீதம் 75:7 ) ஒரு பெற்றோருக்கு இரண்டு குழந்தைகள்! ஒரு குழந்தையை நன்றாக கவனித்தும், மற்றோர் குழந்தையை சரிவர கவனிக்காமலும் இருந்தால் "ஒரு கண்ணுக்கு வெண்ணை, இன்னொரு கண்ணுக்கு சுண்ணாம்பு" என்ற பழமொழி உண்மையாகும் அல்லவா? தேவன் நியாயாதிபதியாக இருக்கும்போது ஒருவன் தாழ்த்தப்படுவதும், வேறு ஒருவன் உயர்த்தப்படுவதும் நியாயம் ஆகுமோ? நிச்சயமாகவே அவர் நியாயாதிபதிதான்! ஆனால், நாம் எந்த ஒருவன் என்பதுதான் முக்கியம்? முதல் ஒருவன் யார்? அவர் ஒருவனையல்லவா படைத்தார்? (மல்கியா 2:15) அந்த "முதலாம் ஒருவன்" ஆதாம்! நம் தேவனாகிய கர்த்தரால் உருவாக்கப்பட்ட முதல் மனிதன். அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க,…(ரோமர் 5:17) அந்த முதல் ஒருவனின் மீறுதல்; கீழ்ப்படியாமையினாலே, பாவமும், மரணமும் பூமியில் நுழைந்தன. இரண்டாம் ஒருவன் யார்? ..கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே.(ரோமர் 5:17) ஆம் அந்த "இரண்டாம் ஒருவன்" எனப்படுவது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து"! ஆதாம் இழந்ததை, கிறிஸ்துவானவர் தமது கீழ்ப்படிதலினாலே, இரத்தம் சிந்துதலினாலே மீட்டார். இன்றும் சிலர், தங்கள் பாவமான கிரியைகளினாலே, "முதல் ஒருவன்" எனப்பட்ட ஆதாமை சார்ந்துகொள்கிறார்கள். வேறு சிலரோ, தங்கள் பரிசுத்த கிரியைகளினாலே "இரண்டாம் ஒருவன்" எனப்பட்ட கர்த்தர் இயேசுவை சார்ந்துகொள்கிறார்கள்! தேவனாகிய கர்த்தரின் நியாயத்தீர்ப்பில் ஆதாமை சார்ந்தோர் தாழ்த்தப்பட்டு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சார்ந்தோர் உயர்த்தப்படுகிறார்கள்! நம் தேவன் நீதியுள்ள நியாயாதிபதியே! இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; (2 தீமோ 4:8) ஆமென்! |
0 comments:
Post a Comment