நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும். - (சங்கீதம் 90:14). பரபரப்பான மருத்துவமனைகள்! அவசர ஊர்திகள்! அவசர சிகிச்சைப் பிரிவுகள்! சிகிச்சை பெறும் நோயாளிகளின் கண்களை கவனித்திருக்கிறீர்களா? அல்லது அவர்களது பிள்ளைகளின் / உறவினர்களின் பரிதவிப்பைக் கண்டிருக்கிறீர்களா? எப்படியாவது பிழைக்கவேண்டும் என மரணத்தின் விளிம்பில் போராட்டம். உறவுகளின் முயற்சிகளும், இறைவேண்டல்களும் ஆங்காங்கே! மருத்துவர்களின் உழைப்புக்கள்! ஒரு மனிதனின் ஆயுளை சற்றே நீட்டிப்பதற்கான பாடுகள்தான் எத்தனை எத்தனை?
ஒரு சில வாரங்களோ, ஒரு சில மாதங்களோ, ஒரு சில வருடங்களோ வாழப்போகிறார்கள். மீண்டும் அதே போராட்டங்களோடு! ஆனால் மோசே என்கிற தேவமனிதரின் ஜெபத்தை மேலே வாசிக்கிறோம் நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும் என. அந்த சங்கீதப் பகுதியின் முற்பகுதியில் மனிதர்கள் நிலையற்றவர்கள் எனவும், தேவனே என்றென்றும் நிலைத்திருப்பவர் எனவும் அறிக்கை செய்யும் அவர், ஒவ்வொரு நாள் காலையிலும் கர்த்தரின் பிரசன்னத்தில் காத்திருந்து பெறும் கிருபை, வாழ்நாள் முழுதும் மகிழ்ச்சியைக் கொடுக்கும் எனவும் வேண்டுதல் செய்கிறார்!
நிச்சயமில்லாத இந்த வாழ்வில், நித்தியமான மகிழ்ச்சியை, கர்த்தரின் கிருபையே நமக்கு அளிக்கிறது! போராடி போராடி ஓய்ந்துபோன வாழ்வுக்கு நிம்மதி வேண்டுமா? மன அமைதி வேண்டுமா? இறைவன் இயேசு கிறிஸ்துவிடம் வந்து வேண்டிப் பாருங்கள். நிச்சயமாய் கிடைக்கும். வாழ்வு நிலையில்லாததுதான். ஆனால், நம் ஆண்டவர் என்றும் நிலைத்திருப்பவர். இருக்கிறவராகவே இருக்கிறவர், என்றும் மாறாதவர்.
நாம் அவரிடம் வேண்டிக்கொள்ளும்போது “நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.(சங்கீதம் 91:16)” என்ற வார்த்தையின்படி நமக்கு இரங்கி நம்மை திருப்தியான நாட்களுக்குள் நடத்துவார். ஆமென்! |
0 comments:
Post a Comment