"பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும். என் பிரியமான சகோதரரே, மோசம்போகாதிருங்கள்." (யாக்கோபு 1:15,16) ஓர் மலைப்பிரதேசத்தில் சுமார் 65 பேரைச் சுமந்துகொண்டு ஒரு பேருந்து பயணித்துக்கொண்டிருந்தது. ஒரு கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது, யாரும் எதிர்பாராமல், திடீரென பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி பெரும் விபத்துக்குள்ளானது. அனேக உயிர் பலிகள்! காயங்கள்; இரத்தங்கள்! விபத்துக்கான காரணத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து கண்டறிந்தனர். பேருந்து நன்றாகத்தான் இருந்தது. அதன் பராமரிப்பு முறைகளும் சரியாகவே இருந்தது. ஆனால் அதன் "பிரேக்" பகுதியை இணைக்கும் ஒரே ஒரு உதிரிபாகம் மட்டும் காணவில்லை. சற்று தளர்வாக இருந்ததால் எங்கோ கழன்று விழுந்து, விபத்து ஏற்பட்டிருந்தது! நல்ல தொழிலில் எங்கோ ஒருவரின் தவறு முழு நிறுவனத்தின் நற்பெயரையும் கெடுத்துவிடும். நல்ல படிப்பாளிதான் ஆனால் ஒரே ஒரு தவறான நட்பு படிப்பையே கெடுத்துவிடும்! நல்ல ஊழியம்தான். ஆனால், ஒரே ஒரு தவறு மொத்தமாகக் கவிழ்த்துவிடும்! விசுவாச வாழ்வு நன்றாகவே போய்க்கொண்டிருக்கும். ஆனால் எங்கோ சிறு இச்சை குளறுபடி செய்துகொண்டிருக்கும். நல்ல திரைப்படம்தானே! சின்ன ஜாலிதானே என, நமக்கு நாமே சான்றிதழ் கொடுத்து பார்த்துவிடுவோம். ஆனால் ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் போல ஏதோ ஒன்று நம் இருதயத்தில் ஒட்டிக்கொள்ளும். ஏற்ற வேளையில் தன் வேலையைக் காண்பிக்கும். கர்த்தர் இயேசுவில் வேறூன்றி, நிலைத்து நிற்கமுடியாமல் தடுத்து நிறுத்தும் அந்த சிறு இச்சை; தவறு, பாவம் எதுவென அறிந்து, அது கர்ப்பம் தரித்து ஆவிக்குரிய மரணம் சம்பவிக்கும் முன்னே தடுத்து நிறுத்த ஆவியானவர் நமக்கு உதவி செய்து நல்லவழியிலே நம்மை நடத்துவாராக! ஒரு சிறு ஓட்டை முழு கப்பலையுமே மூழ்கடித்துவிடும்! எச்சரிக்கை! மோசம் போகாதிருப்போம்! உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான். (1 யோவான் 2:17) ஆமென்! |
0 comments:
Post a Comment