மரணவாசல்கள் உனக்குத் திறந்ததுண்டோ? மரண இருளின் வாசல்களை நீ பார்த்ததுண்டோ? (யோபு 38:17) வேதத்திலே நாம் அனேக வாசல்களைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறோம். அலங்காரவாசல், ஆட்டுவாசல், என நிறைய வாசல்கள் எருசலேம் நகரத்தைச் சுற்றிலும் இருந்தன, இன்றும் இருக்கின்றன. நெகேமியா 3ம் அதிகாரத்தில் இன்னும் அதிக வாசல்களைப் தேவ மனிதர்கள் பழுதுபார்த்துக் கட்டினதாகவும் வாசிக்கிறோம். எவருமே அறியாத, ஆனால் நம் தேவனாகிய கர்த்தர் மாத்திரமே அறிந்த ஒரு வாசல் உண்டு. ஆம் அதுதான் “மரணவாசல்”. யோபு புத்தகத்தின் 38 ம் அதிகாரத்தில் தேவனாகிய கர்த்தர் பெருங்காற்றிலிருந்து யோபுவிடம் பேசி, அவரிடம் தமது வல்லமையையும், யோபுவின் இயலாமையையும் சொல்கிறார். மனிதனின் இயலாமையில் ஒன்றுதான் மரணவாசல் என்றால் என்னவென்று அறியாதது. தேவனாகிய கர்த்தரின் வல்லமையில் ஒன்றுதான் அந்த மரணவாசல் உட்பட சகலத்தையும் அறிந்திருப்பது! யோபு 38:17 ன்படி மரணத்துக்கு அனேக வாசல்கள் உண்டு என்றும், அவைகள் கர்த்தர் சொன்னால் மட்டுமே திறக்கும் என்றும், அங்கே இருள் உண்டு என்றும், அவைகள் கர்த்தருடைய கண்களுக்கு பிரத்தியட்சமாய் உள்ளது என்றும் அறிந்துகொள்ளலாம். அல்லேலூயா! நாம் வழிபடுகிற கர்த்தர் எவ்வளவு வல்லவர்! ஒரு மனிதன் தன் வாழ்நாளை முடித்து இங்கே கண்களை மூடும் வேளையில், அடுத்து அவரது ஆவிக்கு என்ன நடக்கிறது என்பதை உயிரோடிருக்கும் நாம் அறியமுடிவது இல்லை. ஆனால் கர்த்தர் அறிந்திருக்கிறார். ஆண்டவர் இயேசு தாம் கல்லறையில் வைக்கப்பட்டிருந்த வேளையில்தானே நமக்காக, நாம் அந்த இருளைப் பார்க்கக்கூடாதென அவர் (1பேதுரு3:19 வாசிக்க) அதையும் அனுபவித்தார். கிறிஸ்து மரித்தபோது அவரது பிரசன்னம் பாதாளத்திலும், அதே நேரத்தில் பரலோகத்திலும் (ரோமர் 10:6,7 வாசிக்க) இருந்தது என்றால், அவர் எவ்வளவு வல்லவர் என்பதை நம்மால் விளங்கிக்கொள்ள முடிகிறதா? தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, உன்னதமானவருடைய ஆலோசனையை அசட்டைபண்ணினவர்கள், அந்தகாரத்திலும் மரண இருளிலும் வைக்கப்பட்டிருந்து, ஒடுக்கத்திலும் இரும்பிலும் கட்டுண்டு கிடந்தார்கள். (சங்கீ 107: 10,11) கர்த்தரின் வார்த்தைக்கு விரோதமாய் கலகம் செய்தோருக்கும், செய்வோருக்கும், அவரது ஆலோசனையை தள்ளுவோருக்கும் அந்த மரணஇருள் வைக்கப்பட்டிருக்கிறது. “மரணவாசல்களிலிருந்து என்னைத் தூக்கிவிடுகிற கர்த்தாவே, நான் உம்முடைய துதிகளையெல்லாம் சீயோன் குமாரத்தியின் வாசல்களில் விவரித்து, உம்முடைய இரட்சிப்பினால் களிகூரும்படிக்கு..” (சங்கீ 9:13) அவரது வார்த்தைகளைத் தள்ளாமல் அப்படியே ஏற்றுக்கொண்டு, கர்த்தரின் ஆலோசனையின்படி நடக்கிற நம்மையோ கர்த்தர் இயேசுவின் வல்லமை, அந்த மரணவாசல்களிலிருந்து தூக்கியெடுத்து அவரது சமூகத்தில் இரட்சிப்பினால் களிகூறச் செய்கிறது. வார்த்தையாகிய இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்வோர் அவருடன் பரலோகில் இருப்பர். இல்லையேல் வாதையாகிய மரண இருளில் இருப்பர். நாம் எப்படி? கர்த்தாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறப்பண்ணி, நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடே காத்தீர். (சங்கீதம் 30:3) நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும். (சங்கீதம் 23:4) ஆமென்! |
0 comments:
Post a Comment