வெள்ளிக்குக் குகையும், பொன்னுக்குப் புடமும் சோதனை; (நீதி 27:21) இரண்டு கார் ஓட்டுனர்கள் இருந்தார்கள்! இருவருக்கும் இரண்டு விதமான சோதனைகள். ஒருவருக்கு மிக விலையுயர்ந்த கார்! தேசிய நெடுஞ்சாலையில் பயணம். கிட்டத்தட்ட 500 கிலோமீட்டர்கள்! மணிக்கு சராசரியாக 120 கிலோமீட்டர் வேகம்! ஒரு தடையும் இல்லை! சுமார் 4 மணி நேரத்தில் இலக்கை அடைந்துவிட்டர். இன்னொருவருக்கு சராசரியான கார்! அதே 500 கிலோமீட்டர் பயணம், உடன் நான்கு முதியவர்கள்! பயணிக்கும் சாலையும் சுமார்தான்! நான்கு பேரையும் கூட்டிக்கொண்டு வாகனத்தை செலுத்துகிறார். திடீரென மாடு ஒன்று குறுக்கே ஓடுகிறது, சமாளிக்கிறார்! கொஞ்ச நேர பயணத்தில் அரசியல் ஊர்வலம் காரணமாக மாற்றுப்பாதைப் பயணம்! இடர்கள்! சாலையோரத்தில் சிறுவர் சிறுமியர் விளையாட்டு, ரசித்தபடியே முதியவர்களுடன் அன்பாய் பேசிக்கொண்டு செல்கிறார். இடையில் உணவு உட்கொள்ளுகிறார்கள்! எப்படியோ பாதுகாப்பாய் 7 மணி நேரப் பயணத்தில் இலக்கை அடைகிறார்! நாமே புரிந்துகொள்வோம் எவர் சிறந்த வண்டி ஓட்டுனர் என்று! நல்ல சாலை, நல்ல ஓட்டுனரை உருவாக்காது! பெரிய செல்வந்தரின் ஒரே மகனாகப் பிறந்து, வளர்ந்து, (உழைக்கத் தேவையில்லாமல்) வாழ்ந்து முடிப்பது, அல்லது சராசரி குடும்பத்தில் பிறந்து, கஷ்டப்பட்டுப் படித்து, உழைத்து, தேவகிருபையினாலே, சிறப்பான வாழ்வைப் பெறுவது இரண்டில் எது சிறந்தது? கர்த்தர் நமக்குக் கொடுக்க ஆயத்தமாயிருப்பது இரண்டாவது வகைதான். சோதிக்கப்பட்டபின்தான் பொன், ஆபரணமாகி மின்னும், வெள்ளியும் துலங்கும். சோதிக்கப்படவில்லையேல் வெறும் மண்தான்! நாம் மண்ணாக அல்ல! பொன்னாக இருக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம். நம் வாழ்வில் கிடைக்கப்பெறும் சோதனைகள் எல்லாம், நம்மைப் பட்டைதீட்டிக்கொண்டு இருக்கின்றன! இன்று அவைகள் காயமாக இருக்கலாம்! தழும்பாக இருக்கலாம்! இழப்பாக இருக்கலாம்! போராட்டமாக இருக்கலாம்! கர்த்தராகிய இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தை மட்டும் விடாதிருப்போம்! நாம் அவருடைய பிள்ளைகள் அல்லவா? நம்மைக் கைவிடுவாரோ! ஒருபோதும் இல்லை! மிக சந்தோஷமாய் சோதனைகளை எதிர்கொள்வோம்! சோதனைகளை வெல்ல வைக்கும் சர்வ்வல்லவர் இயேசு நம்மோடு! அல்லேலூயா! கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார். (2 பேதுரு 2:9) ஆமென்! |
0 comments:
Post a Comment