<< கர்த்தரின் பட்டயம் >>
அவர்கள் வாயில் கர்த்தரை உயர்த்தும் துதியும், அவர்கள் கையில் இருபுறமும் கருக்குள்ள பட்டயமும் இருக்கும். (சங்கீதம் 149:8)
அமெரிக்கா தேசத்தைச் சேர்ந்த ஒரு ஊழியர், ஆப்பிரிக்கா கண்டத்துக்கு ஊழியம் செய்ய சென்றார். அங்கே ஒரு ஆதிவாசி தலைவரை சந்திக்க நேர்ந்தது. அங்கிருந்து அந்த ஊழியர் புறப்பட்டபோது, அந்த ஆதிவாசி தலைவர், அந்த ஊழியருக்கு தன் அன்புப் பரிசாக தனது பட்டயத்தைக் கொடுத்தார். அந்த ஊழியரும் அந்த பட்டயத்தைக் கையில் வைத்தவாறே, பயணம் செய்தார். அவரைக்கண்ட அவ்விடத்து மனிதரெல்லாம், அவருக்கு வேண்டிய உபகாரங்களையெல்லாம் செய்து, மிகவும் பணிவாகவும், மரியாதையாகவும் நடத்தினார்கள். அவருக்கோ மிகவும் ஆச்சரியம். தன்னுடன் வந்த ஒரு ஆதிவாசி உதவியாளரிடம், ஏன் தனக்கு அவ்வளவு மரியாதை எனக் கேட்டார். உதவியாளர் சொன்னாராம், அது உமக்கான மரியாதை அல்ல! எம் தலைவருடைய பட்டயத்துக்கான மரியாதை –என்று! ஊழியரோ, இந்த சாதாரணபட்டயத்துக்கு இவ்வளவு கனம் என்றால், நான் பல ஆண்டுகளாகச் சுமக்கும் என் கர்த்தரின் பட்டயமாகிய வேதபுத்தகத்திற்காக, என் தேவன் என்னை எவ்வளவாய் கனப்படுத்துவார் என்று சொல்லி, கர்த்தரைத் துதித்தார்.
அனேகருக்கு வேதபுத்தகம் எனும் கர்த்தரின் பட்டயம் கையில் இருக்கிறது. அது எவ்வளவு உயர்ந்தது என அதை உணராதிருக்கிறார்கள்! அந்த "வார்த்தை" எனும் இருபுறமும் கருக்குள்ள பட்டயம், நம்மை காப்பற்றுகிறது; குணப்படுத்துகிறது; ஆசீர்வதிக்கிறது; தேற்றுகிறது; நியாயம் செய்கிறது; வேதத்தை விசுவாசத்தோடு கையிலெடுத்து, வாசித்து, நேசித்து, கீழ்படிந்து நடந்தால், மேன்மையும் நன்மையும் நமக்கே! அல்லேலூயா!
தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.(எபி 4:12)
தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது; அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப்போலிருந்தது.
(வெளி 1:16) ஆமென்!
ஜெபிப்போமா?
அன்பின் பிதாவே! உம் வார்த்தை எனும் பட்டயத்தை எங்கள் கரங்களில் கொடுத்தீரே உமக்கு ஸ்தோத்திரம்! நேர்த்தியாய் பயன்படுத்த கிருபை தாரும். பயன் பெற உதவி செய்யும். அனேகரை நல்வழிப்படுத்த எங்களைப் பயன்படுத்தும். அன்பின் நேசர் இயேசு கிறிஸ்துவின் பெயரில் ஜெபிக்கிறோம் எங்கள் நல்ல பிதாவே! ஆமென்.
0 comments:
Post a Comment