உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும். இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன். (வெளி 3:15,16) கர்த்தர் இயேசுவுக்கு மகிமை! கோழி முட்டையிட்டு அடைகாக்கும்போது, அந்த கோழியின் அடிப்பகுதியில் உண்டாகும் அனல் முட்டைகளின் மீது இருக்கவேண்டும். அப்போதுதான் அந்த முட்டையில் சிருஷ்டிப்பு என்கிற ஒன்று நிகழ்ந்து, குறிப்பிட்ட நாட்கள் கழித்து கோழிக்குஞ்சு வெளியே வரும். ஆனால் ஒரு சில முட்டைகள் கோழியின் சிறகுகளுக்குள்ளே சரியாக இராததினால் அந்த குறிப்பிட்ட அனல் அவைகளுக்கு கிடைக்காது. எனவே அவைகள் வேறு எந்த உபயோகமும் பெறாதபடி அழுகிப்போய்விடும். கர்த்தர் நம்மை அவரது சிறகுகளுக்குள்ளே வைத்து, நம்மை அனலாக்கி, தம்மைப்போல உருவாக்கி, பயன்படுத்த விரும்புகிறார். நாமோ அதற்கு மனதில்லாமல், உலகத்தின் அசுத்தங்களுக்கு பின்னே ஓடி வெதுவெதுப்பாய் இருக்கிறோம். எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும் வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று.(லூக் 13:34) வாந்திபண்ணுவது என்றால், நமக்கு ஆகாத ஒன்றை நம்மைவிட்டு நீக்குவது என்று பொருள்! நாம் கர்த்தருக்கு ஆகாதவர்களாய் மாரும்போது, அவரைவிட்டு தூர தள்ளப்படும் நிலைக்கு ஆளாவோம். காரணம் நாமே, கர்த்தரல்ல! அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும்.(சங்கீ 91:4) உணர்ந்து அவரிடம் வந்தால், மீண்டும் நம்மை அவரால் உருவாக்கக் கூடும். நாம் புதுப்படைப்பாய் மாறுவோம். எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என் ஆத்துமா அண்டிக்கொள்ளுகிறது; விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன்.(சங்கீ 57:1) ஆமென்! |
0 comments:
Post a Comment