சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது. (1கொரிந்தியர் 14:40) நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நல்லொழுக்கங்களின் தேவன் ஆவார். அவர் நம்மிடம் சகலத்தையும் ஒழுங்காகவும், கிரமமாகவும் எதிர்பார்க்கிறார். அது வேதவாசிப்பாகட்டும், ஒரே ஒரு பாடல் பாடுவதாகட்டும், சாட்சி சொல்லுவதாகட்டும், காணிக்கை கொடுப்பதாகட்டும், ஆராதனையாகட்டும் அனைத்திலும் ஒழுங்கும், நேர்த்தியும் நிச்சயம் தேவை. நமது உடையமைப்பிலும், முடி அலங்காரத்திலும் கூட இது பொருந்தும்.
சமீபகாலமாக சில பிரார்த்தனைக் கூடுகைகளில் மிதமிஞ்சிய அளவில், மாயமால ஆராதனைகள் பெருகியுள்ளது. அது “நடன ஆராதனை”. ஆராதனையில் நடனம் இருந்தால், விசுவாசிகளே, கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள்! அதன் விளைவு கடும் மோசமாக இருக்கும். நமது தனிப்பட்ட ஆராதனையில், கர்த்தரோடு தனித்திருக்கும்போது, துதியுங்கள், கரங்களை உயர்த்தி அசையுங்கள்! கரம்தட்டிப் பாடுங்கள்! அபிஷேகத்தால் நிறைந்து, அன்னிய மொழியில் பேசி ஆண்டவரோடு உறவாடி மகிழுங்கள்! தவறே இல்லை!
தாவீது ராஜா உடன்படிக்கைப்பெட்டிக்கு முன்பாக ஆடினாரென்றால், ஒரு நாட்டை ஆள்கின்றவர், சிங்காசனத்தை விட்டிறங்கி, தன்னைத் தாழ்த்தி, நடனமாடினார்! ஆனால் நிச்சயம் அவர் பிறர் கவனத்தை திசைதிருப்புமளவுக்கு ஆடியிருக்கமாட்டார். நிச்சயம் ஒரு குழந்தை தன் கை கால்களை அசைப்பது போல இருந்திருக்கும். (ஆனாலும் அதன் விளைவு – மீகாளுக்கு குழந்தை பாக்கியமில்லாமல் போனதே!)
வேதத்தில் நடனங்களும் அதன் விளைவுகளும்: யாத் 15:20 : மிரியாமுடன் நடனமாடியோர், அதனைத் தொடர்ந்து முறுமுறுக்கவும் செய்தனர். யாத் 32:19 : இஸ்ரவேலரின் நடனம், நிர்வாணமாய், கன்றுக்குட்டிக்கு முன்பாக. கர்த்தரின் தாசன் மோசே கோபம்கொண்டார். 3000 பேர் கொலையுண்டார்கள். நியா 11:34 : யெப்தாவின் குமாரத்தி நடனம், அவள் பலியாக்கப்பட்டாள்! நியா 21:21 : சீலோவாம் குமாரத்திகள் நடனம், சிறைபிடிக்கப்பட்டார்கள்! மத் 14:6 – ஏரோதியாளின் குமாரத்தி நடனம், யோவான் ஸ்னானகருக்கு தலை போய்விட்டது. உடல் அசைவுகள்கூட கர்த்தருக்கு ஏற்புடையதாக இருக்கவேண்டும்! அல்லேலூயா! அவருடைய நாமத்தை நடனத்தோடே துதித்து, தம்புரினாலும் கின்னரத்தினாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணக்கடவர்கள். (சங்கீதம் 149:3) ல் வரும் நடனம் என்பது மூல பாஷையில் வட்டமடித்து என்று பொருளாகும்! ஒரு பிரார்த்தனைக்கூட்டப் பொதுமேடையில் கர்த்தராகிய தேவன் பிரசன்னராயிருப்பார். அங்கே, அதிரவைக்கும் மேற்கத்திய இசையில், உச்ச ஸ்தாதியில் பாடி, மினுக்கும் ஆடையில், மிகுந்த ஒளிவெள்ளத்தில், கதாநாயக ஊழியருடன் இணைந்த, இருபாலரின் பரவசமான அங்கஅசைவுகளில், சர்வவல்லதேவன் எப்படி மகிமைப்படுவாரென்று உணரமுடிகிறதா? இளைஞர்களை இப்படிதான், ஆவிக்குரிய வாழ்வில் வளரச்செய்ய வேண்டுமெனில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, தமது வார்த்தைகளில், ஒரே ஒருமுறையாவது நம்மை ஆடச்சொல்லியிருப்பார்! வீணாக 5000 அல்லது 10000 பேரை அமரவைத்து கத்திக் கத்தி பிரசங்கம் செய்திருக்கமாட்டார்! “அவரது வார்த்தைகளுக்குக் கீழ்படியாவிடில், வாதை வந்து சேரும்” என்பதை மறக்க வேண்டாம். ஆமென்! |
0 comments:
Post a Comment