கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். (சங்கீதம் 1:2) மனிதர்கள் அனைவருக்குமே ஒரு ஆசை உண்டு. அது எல்லோருமே தன் மீது பிரியமாய் நடந்துகொள்ளவேண்டும் என்பதே! ஆனால் அவர்கள் யார்மீதும் பிரியமாய் நடந்துகொள்ள மாட்டார்கள்! ஆனால் எவைகளின் மீது பிரியமாய் இருக்கக்கூடாதோ அவைகளைமட்டும் உறுதியாய் பிடித்திருப்பார்கள். அவைகள் சில நபர்களாக இருக்கலாம்; சில பாவ பழக்கங்களாக இருக்கலாம்; வேண்டாத உறவுகளாக, நட்புக்களாக இருக்கலாம். அவைகளினால் துன்பப்படும்போதுதான் தெரியும், அடடா, தேவையில்லாமல் இதை இவ்வளவு நாள் பிரியமாய் பிடித்திருந்தேனே என்று.
ஒரு உண்மைக் கிறிஸ்தவன் எல்லாவற்றிலும் தேவனாகிய கர்த்தரையே பிரியப்படுத்தும்படி வாழவேண்டும். அப்போதுதான் கர்த்தரின் பிரியத்தைப் பெற்றுக்கொள்ளமுடியும். அவர் பிரியமாய் தம் பிள்ளைகளுக்கு கொடுக்கும் அன்பு பரிசுகளையும் பெறமுடியும். எப்படி கர்த்தரைப் பிரியப்படுத்துவது? வேதத்தில் பிரியப்படுதலும், வேத வார்த்தையை தியானித்தலும், அதன்படி நடப்பதுமே (வாழ்வது) கர்த்தரைப் பிரியப்படுத்துதல் ஆகும். இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப் பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே.(கலா 1:10) மனுஷரைப் பிரியப்படுத்துவோர் ஊழியரும் அல்லர், கிறிஸ்தவரும் அல்லர். வெறும் மனிதரே!
சுவிசேஷத்தை எங்களிடத்தில் ஒப்புவிக்கத்தக்கதாய், தேவன் எங்களை உத்தமரென்றெண்ணினபடியே, நாங்கள் மனுஷருக்கு அல்ல, எங்கள் இருதயங்களைச் சோதித்தறிகிற தேவனுக்கே பிரியமுண்டாகப் பேசுகிறோம்.(1 தெச 2:4) –என்கிற வார்த்தையின்படி நம் பேச்சும் கூட கர்த்தரைப் பிரியப்படுத்த வேண்டும்.
நீர் துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்ல; தீமை உம்மிடத்தில் சேர்வதில்லை. (சங்கீ 5:4) கர்த்தர் நீதியுள்ளவர், நீதியின்மேல் பிரியப்படுவார்; அவருடைய முகம் செம்மையானவனை நோக்கியிருக்கிறது. (சங்கீ 11:7) அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்; பூமி கர்த்தருடைய காருணியத்தினால் நிறைந்திருக்கிறது. (சங்கீ 33:5) நம்முடைய தகப்பனை பிரியப்படுத்தலாமா? அவர் நம்மேல் பிரியமாயிருக்கிறார்! நீ இனிக் கைவிடப்பட்டவள் என்னப்படாமலும், உன் தேசம் இனிப் பாழான தேசமென்னப்படாமலும், நீ எப்சிபா என்றும், உன் தேசம் பியூலா என்றும் சொல்லப்படும்; கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறார்; உன் தேசம் வாழ்க்கைப்படும்.(ஏசாயா 62:4) வீண் சிந்தனைகளை நான் வெறுத்து, உமது வேதத்தில் பிரியப்படுகிறேன். (சங்கீ 119:113) ஆமென்! |
0 comments:
Post a Comment