= இன்றைய தியானம் = << மயங்கிடாதே! >> கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! சாது சுந்தர் சிங் ஐயா அவர்களது, ஊழியத்தின்போது, இமயமலையின் அடிவாரத்தில், ஓரிடத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அங்கே, அழகான மலர்கள் பூத்துக்குழுங்கும் இடம் ஒன்றை கண்டார். அதன் நறுமணமும், அவரை சுண்டி இழுத்தது. அதனருகில் சென்று பார்த்துக்கொண்டிருந்தபோது, மிகவும் அதிகமாக தூக்கம் வரவே, நடைப்பயணத்தினாலே தான் அதிக சோர்வுற்று இருப்பதாக நினைத்து, அருகிலிருந்த ஒரு கல்லின்மேல் படுத்து உறங்கிவிட்டார். சிறிது நேரங்கழித்து யாரோ ஒருவர் தட்டியெழுப்ப, கண்விழித்தார் சாது. எழுப்பியவர் சொன்னார்! "ஐயா இங்கே உறங்காதீர்கள்! ஏனென்றால், இந்த மலர்களின் வாசனையில், மிகுந்த உறக்கம் வரும். அப்படி உறங்குபவர்கள், திரும்ப எழ முடியாதபடி, மயங்கி அப்படியே மரித்துப்போவார்கள். அப்படி மரித்துப்போன அனேகருடைய சடலங்கள், அருகாமையில்தான் புதைக்கப்பட்டிருக்கிறது" என்றார். அது கேட்டு வியப்புற்ற சாது சுந்தர் சிங் "ஐயா உமக்கு நன்றி!" என்று சொல்லி தேவனையும் துதித்து, நன்றி சொல்லி, அவ்விடம் விட்டுக் கடந்து போனாராம். உலகமும் கூட மிக அழகாய் நம்மை ஏமாற்றி, திரும்ப எழமுடியாதபடி, மயக்கிவிடக்கூடும! சில வாலிபப் பெண்கள், பிறர் பேச்சில் மயங்கிவிடக்கூடும்! சிலர் பணத்துக்கு மயங்கியிருப்பார்கள்! சில குடி, வெறி போன்ற இச்சைகள் நம்மை மயக்கிவிடக்கூடும்! சிலருக்கு அந்த மயக்கத்தினால், தாங்கள் இடறுகிறது இன்னதென்று கூட அறியமுடியாது! இப்போதும் கூட சிலர் எழுந்திருக்கமுடியாதபடி பாவங்களிலும், இச்சைகளிலும் மயங்கி சிக்கியிருக்கக்கூடும். பரிசுத்த வாழ்க்கையை இழந்து நிற்கக்கூடும். அனேகருக்கு பின்மாற்றம்! கர்த்தரின் வார்த்தை நம்மை " மகனே! மகளே! மயக்கத்திலிருந்து எழுந்திரு! நான் உனக்கு புது வாழ்வை கொடுக்கிறேன் என அழைக்கிறது. எத்தனைபேருக்கு ஆண்டவர் இயேசுவின் அன்புக்குரல் கேட்டு எழ ஆயத்தம்? பின்மாற்றத்திலிருந்து விடுபட வாய்ப்பளிக்கிறார். மயக்கத்திலிருந்து எழ நம்மை, தம் வார்த்தைகளால், எழுப்புகிறார். எழுந்து அவர் சமூகத்தில் ஒப்புக்கொடுத்தால், நம்மை சீர்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பெலப்படுத்தி, நிலை நிறுத்துவார்! நமக்கு கர்த்தராகிய இயேசுவின் பெயரால் இன்று விடுதலை! அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக்கண்டு, பேதுருவை நோக்கி: சீமோனே, நித்திரைபண்ணுகிறாயா? ஒரு மணிநேரம் நீ விழித்திருக்கக்கூடாதா? நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.(மாற் 14:37,38) ஆமென்! = ஜெபம் செய்வோம் = அன்பின் பரலோகப் பிதாவே! உலகத்தின் மயக்கம், இச்சைகள், பெருமைகள் யாவும் எங்களிட்த்தில் இராதபடி ஒரு விழிப்பைத் தாரும். பின்மாற்றங்களை மாற்றி, மீண்டும் எழும்பிப் பிரகாசிக்க உதவி செய்யும்! மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வேண்டுகிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்! |
0 comments:
Post a Comment