கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக; (1பேதுரு 5:10) தேவனாகிய கர்த்தர் நம்மை நிலை நிறுத்துகிறவர். அல்லேலூயா! நம்முடைய படிப்பில்; தொழிலில்; ஊழியத்தில்; அவருக்கேற்ற வாழ்க்கையில், ஆசீர்வாதமாய் உயர்த்தி நிலை நிறுத்துகிறவர். நித்திய மகிமையாகிய, மகிழ்ச்சியான பரலோக வாழ்வை ஆண்டவர் இந்த பூமியிலேயே நாம் அனுபவிக்கும்படி நம்மை அவர் அழைத்திருக்கிறார். நம்மைச் சுற்றிலும் அனேக தேவைகள் இருந்தாலும் சரி, ஏராளமான எதிர்ப்புக்கள் இருந்தாலும் சரி, எண்ணில்லாத பிரச்சனைகள் இருந்தாலும் சரி, இந்த சூழ்நிலையில்தான் நாம் அந்த பரலோக வாழ்வை அனுபவித்து கர்த்தரை மகிமைப்படுத்த நம்மை தெரிந்தெடுத்திருக்கிறார். எப்படி தங்கம் வெட்டியெடுக்கப்பட்டு, அனேக சோதனைகளைக் கடந்து, பிறகு அணிகலன்களாக மின்னுகிறதோ, அதுபோல நாமும் பொன்னாக மின்னப்போகிறோம். எந்த காரியமும் நிலைப்பதில்லை. என் வாழ்வு முழுதும் தோல்விகள்தான், ஒரு ஜெயமில்லையே என்று சோர்ந்து போகாதிருங்கள். கர்த்தர் நம்மை உயர்த்தும் படி சினேகிக்கிறார். “உம்முடைய தேவன் இஸ்ரவேலை என்றென்றைக்கும் நிலைநிறுத்தும்படிக்குச் சிநேகிக்கிறதினாலே, (2 நாளா 9:8) என்று வாசிக்கிறோம். நம்மை சீர்ப்படுத்தும் கர்த்தர்: நாம் நிலை நிறுத்தப் படும்படிக்கு நம்மை முதலாவது சீர்ப்படுத்துகிறார். சீர்ப்படுத்தல் என்பது சமப்படுத்துதலைக் குறிக்கும். வேண்டாதவற்றை (பெருமை, மேட்டிமை, தேவையற்ற பழக்கங்கள் ஆகியன) வெட்டி எடுத்துப்போட்டு, குறைவுகளை (வியாதி, பெலவீனங்கள், தேவைகள் ஆகியன) தம் கிருபையைக் கொண்டு நிரப்பி நம்மைச் சீர்ப்படுத்துகிறார். சில சோதனைகளை சகித்துக் கொள்ளுங்கள்! சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார்; அவர்கள் கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள் (ஏசா 61:3) இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: உங்கள் வழிகளையும் உங்கள் கிரியைகளையும் சீர்ப்படுத்துங்கள், அப்பொழுது உங்களை இந்த ஸ்தலத்திலே குடியிருக்கப்பண்ணுவேன். (எரே 7:3) நம்மை ஸ்திரப்படுத்தும் கர்த்தர்: அடுத்ததாக நம்மை அவரது வார்த்தைகளில் ஸ்திரப்படுத்துகிறார். கன்மலையாகிய கிறிஸ்துவின்மேல் நம்மை நிறுத்தி ஸ்திரமாக்குகிறார். நமது வாழ்வில் காணப்ப்டுகிற அனைத்து சோதனைகளையும் தாண்டும்படி ஸ்திரப்படுத்திக் காக்கிறார். பயப்படாதிருங்கள்! கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்.. (2 தெச 3:3) கர்த்தாவே, சிறுமைப்பட்டவர்களுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறீர்; அவர்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவீர். (சங்கீ 10:17) நம்மை பலப்படுத்தும் கர்த்தர்: சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பின்பு பலப்படுத்துகிறார். மனிதரைப் போல அல்ல. நம்மோடு கூடவே இருந்து நம் கரத்தைப் பிடித்து பலப்படுத்துகிறார். கலங்காதிருங்கள்! ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்.(1நாளா 29:12) என் கை அவனோடே உறுதியாயிருக்கும்; என் புயம் அவனைப் பலப்படுத்தும். (சங்கீ 89:21) கிறிஸ்துவுக்குள் தேவன் நம்மை அழைத்திருக்கிறார். நாம் ஆண்டவராகிய இயேசுவுக்குள் நிலைத்திருக்க நம்மை ஒப்புக்கொடுத்தால், குமாரன் மகிமைப்படும்படியாக, நம்மை நிலை நிறுத்தி ஆசீர்வதிப்பார். கர்த்தராகிய இயேசுவின் கிருபையால் நாம் உயர்த்தப்படுவோம். நீர் என் உத்தமத்திலே என்னைத்தாங்கி, என்றென்றைக்கும் உம்முடைய சமுகத்தில் என்னை நிலைநிறுத்துவீர். (சங்கீ 41:12) ஆமென்! |