= இன்றைய தியானம் = << நம் வீடு எப்படி இருக்கிறது? >> கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! இந்த குறிப்பிட்ட வீடு, கைகளால் கட்டப்பட்ட வீடு அல்ல! நமது சரீரமே அந்த வீடு! வீட்டுக்கு வாசல் இருப்பது போல, நமது சரீரத்துக்கும் ஒன்பது வாசல்கள் உண்டு! அந்த ஒன்பது வாசல்களுமே பரிசுத்தமாக இருக்கவேண்டும்; கர்த்தரின் சித்தத்தின்படி பயன்படுத்தப்பட வேண்டும்! உங்கள் சரீரங்கள் கிறிஸ்துவின் அவயவங்களென்று அறியீர்களா? அப்படியிருக்க, நான் கிறிஸ்துவின் அவயவங்களை வேசியின் அவயவங்களாக்கலாமா? அப்படிச் செய்யலாகாதே. (1 கொரி 6:15) "வாய்" என்ற ஒரு வாசலை எடுத்துக்கொண்டால், உண்ணவும், பேசவும் மட்டுமன்றி, இயேசுவின் நாமத்தை சொல்லி, தேவனைத் துதிக்கவும், பரிசுத்த ஆவியால் நிரம்பி, நவமான மொழிகளைப் பேசவும், பயன்படுத்தலாமே. "கண்கள்" எதைப் பார்க்கின்றன? பரிசுத்தமா? அசுத்தமா? "காதுகள்" எதைக் கேட்கின்றன? தேவ வார்த்தைகளையா? மற்ற அசுத்தங்களையா? "நாசித்துவாரங்கள்" கர்த்தரால், ஜீவ சுவாசம் ஊதப்பட்ட இடமல்லவா? புகைப்பிடித்து விடும், புகைபோக்கியல்லவே! பிற "வாசல்கள்" விபச்சாரத்துக்கோ, வேசித்தனத்துக்கோ அல்ல! தேவனாகிய கர்த்தரால் அனுமதிக்கப்பட்ட காரியங்களுக்கே அன்றி, வேறொன்றுக்கும் இல்லை! அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. (ரோமர் 12:1) வீட்டின் நடு மையமாகிய "இருதயம்" ஜெபவீடாக இல்லையென்றால், நம் சரீரமாகிய வீடு "கள்ளர் குகை"யே அன்றி வேறொன்றுமில்லை! வீடு பரிசுத்தமாக இருந்தால்தான், "வீடுபேறு" எனப்படும் பரலோக வாழ்வு கிடைக்கும்! "என்னுடைய வீடு ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கிறது; நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள்" என்றார்.( மத் 21:13) ஆமென்! = ஜெபம் செய்வோம் = அன்பின் பரலோகப் பிதாவே! எங்கள் வீடாகிய சரீரத்தை பரிசுத்தமாய்ப் பாதுகாக்க உதவி செய்யும். வாசல்கள் பரிசுத்தமாக இருக்கட்டும்! அசுத்தங்கள் நீங்க சுத்திகரியும்! எங்கள் சரீரமாகிய ஆலயம் மெய்யான ஜெபவீடாக இருக்கட்டும்! மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வேண்டுகிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்! |