= இன்றைய தியானம் = << பாரத்தை வைத்து "விடு" >> கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் சின்னப்பிள்ளைகள், காலையில் பள்ளிக்குச் செல்லும்போது, பள்ளிப் புத்தகங்களையும், மதிய உணவையும் சேர்த்து தங்களது புத்தகப்பையில் எடுத்துச் செல்வார்கள். மாலையில், பள்ளி முடிந்தவுடன், வீடுதிரும்பும் ஆவல் சற்று அதிகமாக இருக்கும். வகுப்பின் இறுதி மணி அடித்தவுடன், தங்களது புத்தகப் பையை எடுத்து மிக வேகமாக மாட்டிக்கொண்டு, வீடு திரும்பும்படி ஆசையுடன் விரைவாகச் செல்வார்கள்! கிறிஸ்தவர்களாகிய நாமும் கூட அக்குழந்தைகளைப் போலத்தான் இருக்கிறோம்! அனேக பாரங்கள் நமக்கு உண்டு! அனேக கஷ்டங்களும் உண்டு! பாரத்தோடு கர்த்தரின் சமூகம் செல்கிறோம்! கண்ணீரோடு ஜெபிக்கிறோம்! முடிந்தபின்போ மீண்டும் அந்த பாரங்களைத் தூக்கி தோள்மேல் போட்டுக்கொண்டு வீடு திரும்பி அல்லல்படுகிறோம்! "கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்து விடு" என்றுதான் எழுதப்பட்டிருக்கிறதேயன்றி, வைத்து எடு என்று எழுதவில்லை! அன்னாள் தேவசமூகத்தில் கண்ணீரோடு ஜெபித்தபின்பு, "அவள் துக்க முகமாய் இருக்கவில்லை" என்றுதானே வாசிக்கிறோம்! நம் துக்க முகத்தை மாற்றி, முகமலர்ச்சி பெறுவோம்! துக்கத்தோடு நாம் இருப்பது, தேவன் நம்மோடு இல்லை என்று சொல்லி அவரை மறுதலிப்பதாகும்! கர்த்தர் நம்மோடுதான் இருக்கிறார்! அவர் "இம்மானுவேல்" அல்லவா? தன் இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது. அவரே அதைத் தன்மேல் வைத்தாரென்று அவன் தனித்திருந்து மௌனமாயிருக்கக்கடவன்.(புலம்பல் 3:27,28) ஆமென்! = ஜெபம் செய்வோம் = அன்பின் பரலோகப் பிதாவே! எங்களுக்காய் பாரஞ்சுமந்தவரே! எங்களின் அனைத்து பாரங்களையும் உம்மிடம் இறக்கி வைக்கிறோம்! இளைப்பாறுதல் கொடுத்தீரே உமக்கு நன்றி! மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வேண்டுகிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்! |
0 comments:
Post a Comment