= இன்றைய தியானம் = << எது ஞானம்? >> கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! வாலிபன் ஒருவன், புதிய இருசக்கர வாகனம் வாங்கினான். அரசாங்க விதிகளின்படி ஓட்டுனர் உரிமம் பெற்றான். தலைக்கு அணியும் ஹெல்மெட் ஒன்றும் வாங்கினான். சில நாட்களுக்குப் பிறகு நடந்த விபத்தில் அந்த வாலிபன் தலையில் மாத்திரம் அடிபட்டு உயிரிழந்தான். காரணம் தான் தலையில் அணிந்திருக்கவேண்டிய ஹெல்மெட்டை, தன் வீட்டில் ஆணியில் மாட்டி வைத்திருந்தான். அரசாங்கவிதிப்படி எல்லாம் வாங்குவது நல்ல ஞானம்தான். ஆனால், அதைப் பயன்படுத்துவதே சிறந்த ஞானம். நம்மை இந்த பாவ உலகில் இருந்து மீட்டெடுக்கும் வார்த்தைகள் அடங்கிய வேதபுத்தகம் எத்தனைபேர் வீட்டில், உறங்கிக்கொண்டு இருக்கிறது?. ஜெபிக்காமல், முழங்கால்கள் பலவீனமாய்ப் போனதால்தான், வாழ்க்கை தள்ளாடிக்கொண்டு இருக்கிறது. கர்த்தர் தமது சகல கிரியைகளையும் ஞானமாகவும், ஞானமாய் நடக்கும்படியும் படைத்திருக்கிறார். ஆத்துமா அறிவில்லாமல் இருப்பது நல்லதல்ல! அவருடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு! அவர்களுக்கு இடறலில்லை! அல்லேலூயா! படிப்போம் ஞானமாய் நடந்து, பரலோகம் சேர்வோம்! ஞானமுள்ளவனுக்கு ஒப்பானவன் யார்? காரியத்தின் தாற்பரியத்தை அறிந்தவன் யார்? மனுஷனுடைய ஞானம் அவன் முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அவன் முகத்தின் மூர்க்கம் மாறும்.(பிரசங்கி 8:1) ஆமென்! = ஜெபம் செய்வோம் = அன்பின் பரலோகப் பிதாவே! ஞானமாய் எங்களைப் படைத்தவரே, உமக்கு நன்றி! பொல்லாப்பை விட்டு விலகி ஞானமாய் நடக்கவும், உமது வேதத்தை நேசித்து, கீழ்ப்படியவும் உதவி செய்து வழி நடத்தும். மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வேண்டுகிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்! |
0 comments:
Post a Comment