= இன்றைய தியானம் = << காயப்படுத்தும் வைத்தியர் >> கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! சிறு விபத்தில் அடிபட்டு கை வீங்கிய நிலையில் இருந்த ஒரு வாலிபனை, அவனது தந்தை நாட்டுவைத்தியரிடம் அழைத்து வந்தார். வைத்தியர் பரிசோதித்துவிட்டு, உட்புறம் எழும்பு விரிசல் விட்டிருக்கிறது. சரிபடுத்தவேண்டுமானால், அந்த எழும்பை உடைத்துதான், திரும்ப கட்டுப்போட்டு சரியாக்கவேண்டும் என்றார். வாலிபனோ, நான் ஏற்கனவே மிகுந்த வலியில் இருக்கிறேன். எழும்பை உடைத்தால் என்ன நடக்குமோ என்று பயந்தான். அவன் தந்தையோ, வைத்தியரிடம் அனுமதி வழங்கினார். அவனது தந்தை, வைத்தியர், உதவியாளர்கள் என அனைவரும் சேர்ந்து, வீங்கின கையைப்பிடித்து அந்த குறிப்பிட்ட எழும்பை வளைத்து உடைக்க ஆரம்பித்தனர். வாலிபனுக்கோ, வலி உயிரை வாங்குவது போல இருந்தது. கோபத்தில் தன் தந்தையை திட்டினான். 15 நிமிடத்தில் அனைத்தையும் முடித்து கட்டுப்போட்டு, வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். 3 மாதத்தில் கை முன்புபோல பழைய நிலைக்கு சரியாகிப்போனது. அந்த வைத்தியம் எப்பேற்பட்டது என்றும், தன் எழும்பை உடைக்க தந்தை உடன்பட்டது தன் நன்மைக்கே என்றும் பிறகுதான் அந்த வாலிபனுக்குப் புரிந்தது. நமக்கு பாவம் என்ற உட்காயத்தினால், வெளிப்புற வாழ்வு வேதனையோடிருந்தால், கர்த்தர் நமக்கு அதைச் சரியாக்க, சில முறைகளைக் கையாளவேண்டியிருக்கும். அது இன்னும் சில வேதனைகளைக் கொடுக்கும். ஆனால், முடிவோ பூரண சமாதானமாய் இருக்கும்! நாம் படுகிற சில காயங்கள், நமது பூரண சுகத்துக்கே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் காயங்களும், நமக்காகவே! இதோ, தேவன் தண்டிக்கிற மனுஷன் பாக்கியவான்; (யோபு 5:17) ஆமென்! = ஜெபம் செய்வோம் = அன்பின் பரலோகப் பிதாவே! காயப்படுத்தி, காயங்கட்டும் உம் அன்பை புரிந்துகொள்ள கிருபை தந்தீர் உமக்கு நன்றி! நீர் சிலுவையில் பட்ட காயங்களும் எங்களுக்காகவே! எங்களுக்குள் இருக்கும் பாவம் எனும் உட்காயத்திலிருந்து குணமாக உதவும்! மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வேண்டுகிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்! |
0 comments:
Post a Comment