கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; (சங்கீதம் 19:7) வேதத்தைக் கிட்டத்தட்ட 4 முறைக்கும் மேல் முழுவதுமாக வாசித்து முடித்த ஒரு கிறிஸ்தவர் இருந்தார். அவருக்குள் ஒரே யோசனை! வேதம் வாசித்து, வாசித்து என்ன பிரயோஜனம்? எத்தனை முறை வாசித்தாலும், அதே வார்த்தைகள்தானே! அதே கர்த்தர்! அதே இயேசு! அதே அற்புதங்கள்! ஒரு மாற்றமும் இல்லையே! –என்று! பல நாட்களாக இப்படி யோசித்து சில நாட்களாக வேதம் வாசிப்பதை நிறுத்தியிருந்தார். பல வருடங்களாக வேதத்தை தினமும் வாசித்துக் கொண்டிருந்தவருக்கு திடீரென அதை நிறுத்தியதும் கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது. அவர் ஒரு நாய் குட்டியை வளர்த்து வந்தார்! ஒரு நாள் மாலை வேளையில், அவரது மனைவி, அந்த நாய்க்குட்டிக்கு சில எழும்புத் துண்டுகளை போடுவதைப் பார்த்தார். அந்த நாய்க்குட்டி வாலாட்டியபடியே, அந்த எழும்புத் துண்டுகளை ரசித்து, ருசித்து கடித்து சுவைக்க ஆரம்பித்தது. ஒரு நிமிடம், இரண்டு நிமிடம் அல்ல, சுமார் 30 அல்லது 40 நிமிடங்கள் வேறு எந்த சிந்தையுமே அதற்கு இல்லை! அதைப்பார்த்துக் கொண்டிருந்த அவரின் மனதில், கர்த்தர் பேச ஆரம்பித்தார்! என்றைக்காவது என் வார்த்தைகளை நீ இப்படி ரசித்து, ருசித்துப் படித்ததுண்டா? என் வார்த்தைகள் என்றும் மாறாததே! வானமும் பூமியும் ஒழிந்தாலும், என் வார்த்தைகள் ஒழியாது; மாறாது! நான் கர்த்தர்! நான் மாறாதவர்! நீ உன்னை என் வார்த்தைகளுக்கு விட்டுக்கொடு! நேசித்து படி! நான் உன்னைத்தான் மாற்றுவேன்" என்றார்! புத்தி தெளிந்தவராக, மீண்டும் வேதத்தைக் கையில் எடுத்து, புதிய சிந்தையோடு, வாசித்து தியானிக்க ஆரம்பித்தார்! புதிய புதிய மறைபொருள்கள் அவருக்கு தெரிய வந்தது. கர்த்தர் வேதத்தின் இரகசியங்களைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்! அவர் ஆத்துமா புதிய உயிர் பெற்றது! அவர், வேதத்துக்கு ஏற்றபடி தன்னை மாற்றிகொண்டார்! கர்த்தரை நேசிக்கும் புதிய மனிதரானார்! அல்லேலூயா! நாம் எப்படி? உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை. (சங்கீதம் 119:165) ஆமென்! |
0 comments:
Post a Comment