கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.(சங்கீதம் 55:22) சிறுவன் ஒருவன் பள்ளியிலிருந்து திரும்பி வரும்போது, தனது புத்தகப் பையினை மிகவும் சிரமப்பட்டு தூக்கிக்கொண்டு வந்தான். வீடு நெருங்கும்போது அவன் சிரமப்பட்டு தூக்கிக்கொண்டு வருவதைக்கண்ட அவனது தந்தை, வேகமாக ஓடிச்சென்று அந்த புத்தகப் பையைத் தூக்கி அவனுக்கு உதவி செய்தார். தன்னால் தூக்க இயலாத தனது புத்தகப் பையை மிக எளிதாக தன் தந்தை சுமப்பதைக் கண்ட அச்சிறுவன் தன் தந்தையிடம் கேட்டான், அப்பா இது உங்களுக்கு பெரிய சுமையாக இல்லையா? என்று! அதற்கு, இல்லை மகனே! என அப்பா சொன்னார். வீடு வந்தவுடன் தன் தந்தையை சோதிக்க அச்சிறுவன் விரும்பி, உங்களால் முடிந்தால் அந்த இரும்புப் பெட்டியை தூக்கிக் காட்டுங்கள் என்றான். சிரித்தபடியே அந்த பெட்டியை அலேக்காகத் தூக்கிக் காட்டினார் அவன் தந்தை! வியந்துபோன சிறுவன் கேட்டான், எப்படி அப்பா உங்களால் இப்படி தூக்கமுடிகிறது? – என்று! சிரித்தபடியே அப்பா பதிலளித்தார், மகனே என் தோள்களில் உள்ள தழும்புகளைப் பார்! நான் நம் ஊரிலுள்ள இரயில் நிலையத்தில் 15 வருடங்களாக சுமை தூக்கும் வேலை செய்துவருகிறேன் அல்லவா? அதிக சுமைகளைச் சுமந்து சுமந்து, அது எனக்கு பழகிவிட்டபடியால், உனக்கு கடினமாகத்தோன்றுவது எனக்கு எளிதாக இருக்கிறது அவ்வளவுதான்- என்று! நம் பரம தகப்பன் யார் தெரியுமா? நமக்காக "சிலுவை" எனும் கொலைக் கருவியை சுமந்தவர். மொத்த உலகின் பாவங்களையும், சாபங்களையும், இழப்புக்களையும் தன் தோள்களில் சுமந்தவர். அவர்தான் நம் அருமை இரட்சகர் இயேசு கிறிஸ்து! எல்லாருக்கும் அவரின் கரங்கள், கால்கள், மார்பு பகுதியிலுள்ள தழும்புகள் தெரியும்! ஆனால் அவரின் தோள்களில் காணப்படும் தழும்புகள் அவரோடு நெருங்கி வாழ்பவர்களுக்கே தெரியும். அது நமக்காக சிலுவை சுமந்ததால் உண்டான வடுக்கள்! அவ்வளவு கடினமான பாரத்தையே சுமந்த நம் அப்பாவுக்கு, இந்த பூமியில் நாம் சுமப்பதாக நினைக்கும் பாரங்கள் ஒரு பொருட்டே அல்ல! விசுவாசத்தோடு அவரிடம் இறக்கிவைத்து விடுவோம்! ஊழிய பாரமா? தொழில் பாரமா? குடும்ப பாரமா? கடன் பாரமா? வாழ்வே பாரமா? கவலைப்படாதிருங்கள். நம்மை ஆதரிக்கும் தகப்பன் இயேசு கிறிஸ்து நமக்காக இருக்கிறார்! எல்லா பரங்களையும் நீக்கி நம்மை சமாதானத்துக்குள் நடத்துவார். ஏற்கனவே அவர் அனைத்தையும் சுமந்து தீர்த்துவிட்டதால் நாம் எதையும் சுமக்க வேண்டியதில்லை! இன்றே அவரின் ஆறுதலைப் பெற்று கர்த்தரை மகிமைப் படுத்துவோம்! அல்லேலூயா! …பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம் (எபி 12:1) ஆமென்! |
0 comments:
Post a Comment