படுத்திருந்த அவனை இயேசு கண்டு, அவன் வெகுகாலமாய் வியாதிஸ்தனென்று அறிந்து, அவனை நோக்கி: "சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா" என்று கேட்டார்.(யோவான் 5:6) ஒரு வருடம், இரண்டு வருடம் அல்ல! 38 வருடமாய் நடக்க இயலாத பெலவீனத்தோடு பெதஸ்தா என்ற குளத்தின் அருகே, நம்பிக்கையற்ற நிலையில் படுத்திருந்த மனிதரைப் பார்த்து கர்த்தர் கேட்டார், நீ சுகமாகவேண்டுமென விரும்புகிறாயா? என்று! அதே வழியில் நம்மைப்பார்த்துக் கேட்கிறார்.. நீ சுகமடைய விரும்புகிறாயா? நீ அற்புதம் பெற்றுக்கொள்ள விரும்புகிறாயா? உன் தேவைகள் சந்திக்கப்பட விரும்புகிறாயா? உன் பெலவீனம் மாற விரும்புகிறாயா? படுத்து, சோர்ந்திருக்கிற வாழ்வு, தொழில்கள் மீண்டும் எழுந்து நிற்கவேண்டுமென விரும்புகிறாயா? ஒரு புதிய ஆசீர்வாதம் வேண்டுமா? -என! அந்த மனிதர் தன்னிடம் இந்த கேள்வியைக் கேட்ட நபர் யாரென்று அறிந்திருக்கவில்லை! ஆனாலும் அதைக்குறித்து கவலைகொள்ளாத நம் இரட்சகர் இயேசு அவரை சுகமாக்கினார். இதோ, நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே என்றார். (யோவான் 5:14) என்ற வார்த்தையின் மூலம், அந்த மனிதரின் 38 வருட பெலவீனத்திற்கு (கேட்டிற்கு) அவரது பாவமே காரணமாக இருந்தது. நம் வாழ்விலும் கூட கர்த்தர் தரும் சுகத்தையோ; பெலத்தையோ; எந்த நன்மைகளையுமோ பெற்றுக்கொள்ள முடியாதபடி நாம் செய்த பாவங்கள் தடுத்துவிடும். ஏனென்றால், நாம் செய்த பாவம் நம் வீட்டு வாசற்படியில் அல்லவா படுத்திருக்கும்! அது எந்த ஒரு நன்மையும் உள்ளே வராதபடி தடுக்குமல்லவா? நாம் நம் பாவங்களை அறிக்கையிட்டு மனம் திரும்பினால், தடைகள் நீங்கும், ஆசீர் பெருகும்! கேடுகள் நீங்கும்! பாடுகள் குறையும்! கர்த்தரின் நாமம் நம் வாழ்வில் மகிமைப்படும்! அல்லேலூயா! நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள்.(ஏசாயா 1:19) ஆமென்! |
0 comments:
Post a Comment