"சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்" (யாக்கோபு 1:12) குமார் என்கிற விசுவாசி ஒருவர் இருசக்கர வாகனத்தில், அலுவலக வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது தூரத்தில் காவலர்கள் இருசக்கர வாகனப் பயணிகளைச் சோதனை செய்துகொண்டிருந்ததைப் பார்த்தார். ஒருசிலர் காவலர்களைப் பார்த்தவுடன் பதறி, வேறுவழியாக தங்கள் வாகனத்தை வேக வேகமாகத் திருப்பிக்கொண்டு ஓடினார்கள். ஆனால், குமாரிடம் ஓட்டுனர் உரிமம், வாகனக் காப்பீடு, பதிவு சான்றிதழ் ஆகியன இருந்தபடியால், தைரியமாக அதே வழியில் சென்றார். ஆனாலும் காவலர்கள் குமாரையும் வழிமறித்து சோதிக்கலானார்கள். சிலர் சிக்கி விழித்துக்கொண்டிருந்தார்கள். குமாரிடம் ஓட்டுனர் உரிமம், வாகனக் காப்பீடு, பதிவு சான்றிதழ் ஆகியவற்றை சரிபார்த்தபிறகு, குடித்திருக்கிறாரா எனவும் சோதித்தனர். தான் ஒரு கிறிஸ்தவர் எனவும், தனக்கு குடிப்பழக்கம் இல்லையென்றும் தெரிவித்தாலும்கூட, சோதித்து எந்த ஒரு வாசனையும் இல்லையென அறிந்தபின்தான், அவர் செல்ல அனுமதித்தார்கள். ஏறக்குறைய 5 அல்லது 6 நிமிடங்கள் தாமதமானது குமாருக்கு. ஏன்தான் இப்படி சோதிக்கிறார்களோ? எல்லாம் சரியாக வைத்திருந்தாலும் சோதித்து தாமதப்படுத்திவிட்டார்களே என சற்றே நொந்துகொண்டார். சுமார் 2 கிலோமீட்டர்கள் பயணம் செய்திருப்பார். சற்றுதூரத்தில் கொஞ்சம் கூட்டமாக இருந்தது. அருகில் சென்று பார்த்தால், சற்று முன்பாக மின்சாரகம்பி அறுந்து விழுந்ததில் ஒருவர் பலியாகியிருந்தார். இருவர் காயமுற்றிருந்தனர். "நல்ல வேளை கொஞ்சம் லேட்டா வந்தவங்க எல்லாம் தப்பிச்சாங்க" என்று யாரோ ஒருவர் சொன்னது குமார் காதிலும் விழ, அப்போதுதான் புரிந்தது. அந்த சோதனை தன்னைக் காப்பாற்ற கர்த்தர் அனுமதித்த ஒன்று என! நன்றி செலுத்தியபடியே வீடு சென்று சேர்ந்தார் பிறகு! கர்த்தர் நம் வாழ்வில் அனுமதிக்கும் சோதனைகள் நன்மைக்கே! சகித்தலே நல்லது. புலம்பாமல், ஏற்றுக்கொண்டால், துதியோடு நன்றி சொல்லுவோம்! அல்லேலூயா! (சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்;) அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான். (யாக் 1:12) ஆமென்! |
0 comments:
Post a Comment