உனக்குள்ளே தேவர்களின் ஆவி உண்டென்றும், வெளிச்சமும் புத்தியும் விசேஷித்த ஞானமும் உன்னிடத்தில் காணப்பட்டதென்றும் உன்னைக்குறித்துக் கேள்விப்பட்டேன். (தானியேல் 5:14) பெல்ஷாத்சார் எனும் பாபிலோன் ராஜா, கர்த்தரின் தாசனாகிய தானியேலைக் குறித்து சொல்லிய வார்த்தைகள்! (வெளிச்சமும் புத்தியும் விசேஷித்த ஞானமும் உன்னிடத்தில் காணப்பட்டதென்றும் உன்னைக்குறித்துக் கேள்விப்பட்டேன்.) கர்த்தருடைய கண்களுக்கு முன் பரிசுத்தமாய் நடந்த வாலிபன் தானியேலின் ஞானம் தலைமுறை கடந்து, பெல்ஷாத்சார் எனும் ராஜாவுக்கு தெரிய வந்தது என்றால், கர்த்தர் தானியேலை எவ்வளவு விசேஷித்த ஞானத்தால் நிரப்பியிருந்திருப்பார்! புதிய கல்வியாண்டுக்குள் பிரவேசிக்க இருக்கும் நம் பிள்ளைகளும், நாம் ஒவ்வொருவரும் அப்படிப்பட்ட விசேஷித்த ஞானத்தைப் பெற்றுகொள்ள வேண்டாமா? வெளிச்சம் – வேதத்தைப் படித்து தியானித்து கைக்கொள்ளும்போது கிடைக்கும். புத்தி – பொல்லாப்பை விட்டு (பாவம் செய்வதைவிட்டு) விலகுவதால் கிடைக்கும்(யோபு 28:28) ஞானம் – கர்த்தருக்கு பயப்படுதலும், தீமைவிட்டு விலகுதலும் ஆகும். மேற்கண்ட 3 காரியங்களும் இணையும்போது கர்த்தரின் கிருபையினால் அது, "விசேஷித்த ஞானமாக" மாறுகிறது! போட்டிகள் நிறைந்த படிப்பு உலகம், வேலை வாய்ப்புக்கள், வேகமான உலகம்! இதில் நம் பிள்ளைகளுக்கு கர்த்தர் அருளும் விசேஷித்த ஞானமே அவர்களை தப்பிப் பிழைக்க வைக்கும்! நன்றாக படிக்க வைக்கும்! இச்சைகள், பாவங்கள், தவறான நட்புக்கள், ஆலோசனைகள், பாலிய குற்றங்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும். ஜெபத்தோடு பள்ளிக்கும், கல்லூரிக்கும் அனுப்புவோம், கர்த்தருக்கு நேராக நடத்துவோம்! கர்த்தரே நம் பிள்ளைகளையும், நம்மையும் "விசேஷித்த ஞானத்தால்" நிரப்புவாராக! ஆசீர்வதிப்பாராக! உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.(யாக்கோபு 1:5) ஆமென்! |
0 comments:
Post a Comment